சென்னையில் மினி பேருந்துகளின் இயக்கம் படிப்படியாக அதிகரிக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் 75வது சுதந்திர தின விழா, அமுத பெருவிழா மற்றும் பல்துறை பணி விளக்க கண்காட்சியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். பின்னர் பயனாளிகளுக்கு ரூ. 80.40 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், பெரம்பலுார் அருகே மருதையாற்றை துார்வாரும் பணியையும் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், சென்னையில் நிறுத்தப்பட்ட மினி பேருந்துகளின் இயக்கம் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் தேவைப்படும் வழித்தடங்கள் கண்டறியப்பட்டு வருவதகவும், அரசு பேருந்துகளுக்கு காப்பீடு செய்வது தொடர்பாக துறை ரீதியான ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசு பேருந்து விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்க அரசு நிதி ஒதுக்கி வருகிறது எனவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்துனர் பணிக்கான உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.