'வெறும் 800 மெகா வாட் பற்றாக்குறை மட்டுமல்ல; மின் உற்பத்தியே குறைவாகத்தான் உள்ளது' – சீமான்

சென்னை: தமிழகத்தில் ஒரு நாளைக்கான மின் உற்பத்தித் திறன் 13,000 மெகா வாட் என்ற அளவில் மட்டுமே உள்ள நிலையில், ஒரு நாளைக்கான மொத்த மின்தேவையோ 17,000 மெகா வாட் என்ற அளவில் இருக்கிறது. எனவே வெறும் 800 மெகா வாட் மின்சாரப் பற்றாக்குறையே மொத்த மின்வெட்டிற்கும் காரணம் என்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தொடரும் அறிவிக்கப்படாத பலமணி நேர மின்வெட்டால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோடைக்காலத்தில் அதிகரிக்கும் மின்தேவைக்கேற்ப மின் உற்பத்தியை அதிகரிக்க முன்கூட்டியே எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் மெத்தனப்போக்கே தற்போதைய மின்தடைக்கு முக்கியக் காரணமாகும்.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்படாத பலமணி நேர மின்வெட்டு நிலவியது போல், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு ஏற்பட்டு, தமிழகம் இருளில் மூழ்கும் என்று மக்களிடம் நிலவிய பொதுக்கருத்தினை மெய்ப்பிக்கும் விதமாகத் தற்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. பகல் முழுவதும் கோடை வெப்பத்தின் பிடியில் சிக்கிய மக்கள், இரவில் பல மணி நேரங்களாகத் தொடரும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உறக்கமின்றித் தவித்து வருவது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

கடந்த அக்டோபர் மாதம் 10-ம் தேதி தமிழகத்தில் ஒரு நொடிகூட மின்வெட்டு இருக்காது, தேவையான நிலக்கரியைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய மின்சாரத்துறை அமைச்சர், தற்போது மத்திய தொகுப்பிலிருந்து சரிவர நிலக்கரி வரவில்லை என்று காரணம் கூறுவதை எவ்வாறு ஏற்க முடியும்? கடந்த ஆறு மாத காலமாக நிலக்கரியைப்பெற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும், கடந்த 18.04.2022 அன்று சட்டப்பேரவையில் மின்வெட்டு குறித்த கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய மின்துறை அமைச்சர், மத்திய தொகுப்பிலிருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் 800 மெகா வாட் மின்சாரம் திடீரெனத் தடைப்பட்டதே தற்காலிக மின்தடைக்குக் காரணம் என்றும், தமிழகத்தில் தற்போது மின்வெட்டே இல்லை என்றும் கூறினார். ஆனால், அதன் பிறகும் தமிழகத்தில் பல மணிநேர மின்வெட்டு நிலவி வருகிறது. தமிழகத்தில் 13,000 மெகா வாட் என்ற அளவில் மட்டுமே ஒரு நாளைக்கான மின் உற்பத்தித் திறன் உள்ள நிலையில், ஒரு நாளைக்கான மொத்த மின்தேவையோ 17,000 மெகா வாட் என்ற அளவில் இருக்கிறது. எனவே வெறும் 800 மெகா வாட் மின்சாரப் பற்றாக்குறையே மொத்த மின்வெட்டிற்கும் காரணம் என்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

தற்போதைய அறிவிக்கப்படாத மின்வெட்டால் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், மாணவர்கள், நோயாளிகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். விடியல் ஏற்படுத்தப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, விடியும் வரை மக்களை இருளில் மூழ்க வைத்திருப்பதுதான், திமுக சொன்ன விடியல் ஆட்சியா? அல்லது இதற்கும் அணில்கள்தான் காரணமா? என்று மக்கள் வேதனை குரல் எழுப்புகின்றனர். மேலும், அறிவிக்கபடாத மின்வெட்டால் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தியும் பெரிதளவில் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, தமிழக அரசு இனியாவது விழிப்படைந்து தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின்தடையைப் போக்கி, மக்கள் நலனைப் பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.