பெங்களூரு : இரண்டு ஆண்டுகளாக, வெறிச்சோடி காணப்பட்ட லால்பாக் பூங்கா, கப்பன் பூங்கா களை கட்டியுள்ளது. சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.பெங்களூரின் லால்பாக், கப்பன் பூங்காக்கள் வரலாற்று பிரசித்தி பெற்றவை. தினமும் ஆயிரக்கணக்கானோர், காலை, மாலையில் இப்பூங்காக்களில் நடை பயிற்சி செய்வர். வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்து சுறறுலா பயணியர் வருவர்.
இதனால் இப்பூங்காக்கள் எப்போதும் களை கட்டியிருக்கும்.கொரோனா பரவியதால், மாதக்கணக்கில் பூங்காக்களில் சுற்றுலா பயணியர், பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. வெறிச்சோடி காணப்பட்டது.தற்போது தொற்று குறைந்ததால், பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. லால்பாக், கப்பன் பூங்காக்களின் சூழ்நிலை இயல்பு நிலைக்கு திரும்பியது. சுற்றுலா பயணியர் எண்ணிக்கையும், வருவாயும் அதிகரித்துள்ளது.தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் குசுமா கூறியதாவது:கொரோனாவுக்கு முன், லால்பாக் பூங்காவுக்கு தினமும் 5,000 முதல் 7,000 பேர், வார இறுதியில் 10 ஆயிரம் பேர் வந்தனர். தொற்று பரவிய பின், இந்த எண்ணிக்கை குறைந்தது. இப்போது எண்ணிக்கை அதிகரித்துள்ளது.நகரின் மத்திய பகுதியில் உள்ள, கப்பன் பூங்காவிலும் சுற்றுலா பயணியர் அதிக அளவில் வருகின்றனர். பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதால் மாணவ – மாணவியரும் பூங்காக்களுக்கு வருகின்றனர். கொரோனா விதிமுறையை பின்பற்றும்படி, இவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement