புதுடெல்லி: இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து 85.5 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. பெட்ரோலிய உற்பத்தி பொருட்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தாலும், சமையல் எரிவாயுவை சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.இதனால், உலகின் 3வது மிகப் பெரிய கச்சா எண்ணெய் நுகர்வு மற்றும் இறக்குமதி நாடாக இந்தியா இருந்து வருகிறது. கடந்தாண்டு ஏப்ரல் முதல் 2022 மார்ச் மாதம் வரை ₹9,04,400 கோடி மதிப்பிலான கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் ₹4,72,720 கோடியாக இருந்தது என்று பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவு கூறியுள்ளது. கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத வகையில், மார்ச் மாதம் மட்டும் ₹1.04 லட்சம் கோடிக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் ₹63,840 கோடியாக இருந்துள்ளது.கச்சா எண்ணெயின் தேவை, உக்ரைன் போர் போன்ற காரணங்களால் கடந்த ஜனவரி முதல் கச்சா எண்ணெய் விலை சர்வதேச அரங்கில் தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஜனவரியில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்று ₹7,600க்கும் சற்று கூடுதலாக விற்பனையான நிலையில், மார்ச் தொடக்கத்தில் ₹10,640 ஆக உயர்ந்தது. பின்னர் விலை சற்று குறைந்து தற்போது ₹8,056 ஆக விற்பனையாகிறது. கடந்தாண்டில் மட்டும் நாட்டில் 2,027 லட்சம் டன் பெட்ரோலிய பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரம், கடந்தாண்டில் ₹1.83 லட்சம் கோடி மதிப்பிலான 4,020 லட்சம் டன் பெட்ரோலிய உற்பத்தி பொருட்கள் இறக்குமதியாகி உள்ளது. இது தவிர, 3,200 கோடி கனமீட்டர் எல்என்ஜி காஸ் இறக்குமதிக்கு இந்தியா ₹90,440 கோடி செலவிட்டுள்ளது. இது அதற்கு முந்தைய 2 நிதியாண்டுகளை காட்டிலும் கூடுதலாகும், என்று பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவு தெரிவித்தது.