சீனப் பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணவர்கள் சீனா திரும்ப அந்நாட்டரசு அனுமதி வழங்காததற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக சீனர்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை இந்தியா நிறுத்தி உள்ளது.
2020-ம் ஆண்டு, கொரோனா ஊரடங்கால், சீனப் பல்கலைக்கழகங்களில் படித்த இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர். தற்போது படிப்பை தொடர மீண்டும் அவர்கள் சீனா செல்ல முற்பட்ட நிலையில், அங்கு கொரோனா பரவல் அதிகரித்ததால் வெளிநாட்டு மாணவர்கள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
22,000 இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆனதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீன அரசு இணக்கமான முடிவு எடுக்குமாறு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதும், சீனா முடிவை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.
இதையடுத்து, சீனாவிற்கு பதிலடி தரும் விதமாக, சீனர்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.