புதுடெல்லி: எல்ஐசி பங்குகளில் 3.5 சதவீத பங்குகளை மட்டும் விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான ஒப்புதலை எல்ஐசி இயக்குநர் குழு வழங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதில் பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய மற்றும் உலகின் 5வது பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை விற்று நிதி திரட்ட முடிவு செய்தது. இதற்கான பங்குகள் மே முதல் வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிறுவனத்தில் முதற்கட்டமாக 5 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்து, இதற்கான வரைவு அறிக்கையை செபியிடம் ஒன்றிய அரசு தாக்கல் செய்தது. இந்நிலையில், 3.5 சதவீத பங்குகளுக்கான ஐபிஓ-க்களை மட்டுமே வெளியிட ஒன்றிய அரசு தற்போது முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில மாதங்களாக பங்குச்சந்தையில் திடீர் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. உக்ரைன்- ரஷ்யா போர், கொரோனா பரவல் உட்பட பல காரணங்களால் பங்குச் சந்தைகளில் ஸ்திரத்தன்மையற்ற நிலை காணப்படுகிறது. இதனால், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் ஈடுபட தயக்கம் காட்டி வருகின்றனர். எனவேதான், 5 சதவீதத்துக்கு பதிலாக 3.5 சதவீத பங்குகளுக்கான ஐபிஓ-க்களை மட்டுமே வெளியிடுவது என ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதற்கு எல்ஐசி நிர்வாகக் குழுவும் ஒப்புதல் வழங்கியிருப்பதாக, சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது, ஒன்றிய அரசின் நிதி திரட்டும் திட்டத்துக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. 3.5 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் சுமார் ₹21,000 கோடி திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.