புதுடெல்லி: கோழி தீவனத்துக்காக, 20 லட்சம் டன் கோதுமை, அரிசி வழங்கும்படி ஒன்றிய அரசுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கோரிக்கை விடுத்துள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு விடுத்துள்ள கோரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் சோளம் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள பீகாரில், சோளத்தில் இருந்து இயற்கை எரிபொருள் தயாரிக்கும் திட்டத்துக்காக அதிகளவு சோளம் பயன்படுத்தப்படுவதாலும், ஏற்றுமதி அதிகரிப்பினாலும் கோழி தீவனத்துக்கான சோளத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், ரூ.18,000க்கு விற்பனையான ஒரு டன் சோளத்தின் விலை தற்போது ரூ.25,000 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே, கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, முட்டை உற்பத்தி விலை அதிகரிப்பு, சராசரி பண்ணை விலை வித்தியாசத்தினால் ஏற்படும் இழப்பு என வாழ்வாதாரம் பாதித்துள்ள நிலையில், மனிதர்களால் பயன்படுத்த முடியாத அளவு பாழான, சேதமடைந்த 20 லட்சம் டன் கோதுமை, அரிசி, குறுணை அரிசியை ஒதுக்கீடு செய்து, கோழி பண்ணையாளர்கள், கோழி தீவன உரிமையாளர்களின் வாழ்வாதாரத்துக்கு ஒன்றிய அரசு உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.