சென்னை: பாடத்திட்டத்தில் 3-வது மொழி சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டுமே தொடரும் என்று பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் நீண்ட காலமாக இருமொழிக் கொள்கை அமலில் இருக்கிறது. இதை மாற்றி மும்மொழிக் கொள்கையை புகுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு மறைமுகமாக தொடங்கியுள்ளதாக வலைதளங்களில் செய்தி வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தாய்மொழியாகிய தமிழ், உலக இணைப்பு மொழியான ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை மட்டுமே தற்போது வழக்கத்தில் இருக்கிறது.
இதற்கிடையே, 2006-ம் ஆண்டு தமிழ் மொழி கற்கும் சட்டத்தின்படி ஒவ்வொரு மாணவரும் 10-ம் வகுப்புவரை தமிழை கட்டாயப் பாடமாகபடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனினும், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது என, தமிழை தாய்மொழியாக கொள்ளாத மாணவர்கள் பலர் இங்கு உள்ளனர். அவர்கள் தமிழுடன் சேர்த்து, அவர்களது தாய்மொழியையும் விருப்ப பாடமாக படித்து, தேர்வு எழுதும் நடைமுறை பல ஆண்டுகளாக இருக்கிறது. மொழிப் பாடக் கொள்கை குறித்துபரப்பப்படும் தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம்.