துணைவேந்தர்களை அரசே நியமிக்க சட்ட மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
குஜராத் மாநிலத்தில் உள்ளதுபோல் தமிழகத்திலும் பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடக மாநில சட்டத்தின்படி துணைவேந்தர்களை மாநில அரசின் இசைவுடன் தான் நியமிக்க முடியும். அதேபோல் தமிழகத்திலும் துணைவேந்தர் நியமன மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு எதிர்ப்புக்கூறி பாஜக வெளிநடப்பு செய்தது. மேலும் பல்கலைக்கழக துணைவேந்தர் மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக அறிவித்தது.
துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் சட்டமசோதா மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலைதூக்கி இருக்கிறது. துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசை ஆளுநர் மதிக்காமல் செயல்படுவது மக்கள் ஆட்சிக்கு விரோதமானது. துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக்கூடாது என பூஜ்யம் ஆணையம் பரிந்துரைத்துள்ளது என்று பேசினார்.
அதனைத்தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசின் ஆணையின் மூலம் தேர்வுசெய்யும் வகையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மசோதா நிறைவேற்றப்பட்டது. உதகையில் ஆளுநர் ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடக்கும் நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM