திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 50).
இவரது மனைவி உஷா (45). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நேற்றிரவு மூவரும் வீட்டை பூட்டி விட்டு தூங்க சென்றனர்.
இன்று அதிகாலையில் இவர்களின் வீட்டில் இருந்து கரும்புகை வந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை மீட்க முயன்றனர்.
இதில் ரவீந்திரனும், அவரது மனைவி உஷாவும் தீயில் கருகி பிணமாக கிடந்தனர். அவர்களின் மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்தார். தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே அங்கு வந்த போலீசார் வீட்டில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என கூறப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தீயில் கருகி கணவன்-மனைவி இறந்த சம்பவம் இடுக்கி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.