புதுடெல்லி: பிரதமர் மோடி தனது மாதாந்திர ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் நேற்று உரையாற்றியதாவது: நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டையொட்டி, இந்திய பிரதமர்களின் அருங்காட்சியம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி திறக்கப்பட்டது. பிரதமர்களின் பங்களிப்பை நினைவு கூர இதை விட சிறந்த நேரம் வேறு எதுவும் இருக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளில் யுபிஐ எனும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வசதி விரைவாக நமது பொருளாதாரம் மற்றும் பழக்கங்களின் அங்கமாக மாறிவிட்டன. இப்போது சிறு நகரங்களிலும், பெரும்பான்மையான கிராமங்களிலும் கூட, மக்கள் யுபிஐ வாயிலாக கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு வருகிறார்கள். டிஜிட்டல் முறை பொருளாதாரம் மூலமாக தேசத்தில் புதிய கலாச்சாரம் உருவாகி வருகிறது. இப்போது நாட்டில் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட ₹20,000 கோடிக்கு டிஜிட்டல் பணபரிவர்த்தனைகள் நடக்கின்றன. கடந்த மார்ச் மாதத்தில், யுபிஐ பரிவர்த்தனை கிட்டத்தட்ட ₹10 லட்சம் கோடியை எட்டி விட்டது. இதனால் தேசத்தில் வசதிகளும் அதிகரித்து வருகிறது, நேர்மையான ஒரு சூழலும் உருவாகி வருகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் அதிகமாக நிலவும் நிலையில், நீர் பாதுகாப்பு அவசியமாகிறது. நாட்டின் 75வது சுதந்திர ஆண்டையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகள் உருவாக்கும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.