சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் புதிதாக மேலும் 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், வளாகத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் கடந்த வியாழக்கிழமை மந்தாகினி என்ற விடுதியில் தங்கியிருந்த மாணவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொடர்பில் இருந்த மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 3 பேருக்கும், அதன் பின்னர் 18 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பரிசோதனையை தீவிரப்படுத்திய சுகாதாரத் துறை, அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தியது. இதனை அடுத்து, படிப்படியாக கரோனா தொற்றின் எண்ணிக்கை உயர்ந்தது. ஐஐடி வளாகத்தில் நேற்று வரை கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்திருந்தது.
இந்நிலையில், நேற்று 600 பேருக்கு புதிதாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் 18 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை ஐஐடியில் இதுவரை 2,057 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 78 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர். சிலருக்கு லேசான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருப்பதாகவும், தேவைப்பட்டால் கிண்டி கிங்ஸ் கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் சுகாதாரத் துறை சார்பில் தெரிவித்துள்ளது.