திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தையொட்டி 18 கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.
திருக்கனுார் அரசுப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் தலைமை தாங்கினார். உதவிப் பொறியாளர் மல்லிகார்ஜுனா, திருக்கனுார் உதவி வேளாண் அலுவலர் திருமுருகன், வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் சிறு விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
விவசாய கடன் அட்டை குறித்து வங்கி அதிகாரிகள், வேளாண் அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். இதில், ஜல்ஜீவன் திட்டத்தல் மத்திய அரசின் நிதியை பெற்று குடிநீர் குழாய்கள் அமைத்து, குடிநீர் வினியோகத்தில் தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்ற வேண்டும்.கிராமத்தின் அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் அகற்றி சுத்தம் செய்வது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது, பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு கிராமத்தை பசுமையான கிராமமாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
பொது மக்கள் எதிர்ப்பு
இதற்கிடையே, செட்டிப்பட்டு, சுத்துக்கேணி, காட்டேரிக்குப்பம் கிராமங்களில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் விவசாய கடன் அட்டை குறித்து விளக்கம் அளிக்க வங்கி அதிகாரிகள், வேளாண் அலுவலர்கள் யாரும் வரவில்லை. அதையடுத்து, கூட்டம் நடத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, வங்கி மேலாளர் மற்றும் வேளாண் அலுவலகர்கள் வரவழைக்கப்பட்டு, விவசாய கடன் அட்டை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
Advertisement