புதுடெல்லி:
இந்தியாவில் புதிதாக 2,541 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.
கடந்த 19-ந்தேதி பாதிப்பு 1,247 ஆக இருந்தது. அதன் பிறகு தொடர்ந்து 5 நாட்கள் பாதிப்பு உயர்ந்து நேற்று 2,593 ஆக இருந்தது. இந்நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. புதிய பாதிப்பில் அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் 1,083 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரியானாவில் 417 பேர், கேரளாவில் 281, உத்தரபிரதேசத்தில் 212, மகாராஷ்டிராவில் 144, மிசோரத்தில் 107 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 60 ஆயிரத்து 86 ஆக அதிகரித்துள்ளது.
அதே நேரம் கடந்த ஒரு வாரத்தில் நாடு முழுவதும் சுமார் 15,800 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருப்பது புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது. இது முந்தைய வாரத்தை விட(8,148 பேர்) 95 சதவீதம் அதிகம் ஆகும்.
குறிப்பாக டெல்லி, அரியானாவில் ஒருவார பாதிப்பு இருமடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. உத்தரபிரதேசத்திலும் பாதிப்பு வெகுவாக உயர்ந்துள்ளது.
இதுதவிர கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, மேற்குவங்காளம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் உள்பட நாடு முழுவதும் 12 மாநிலங்களில் ஒரு வார பாதிப்பு அதிகரித்திருப்பது புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது.
ஒமைக்ரானின் புதிய வடிவம் தான் இந்த பாதிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 24 மரணங்கள் மற்றும் உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவில் தலா 2 பேர், மிசோரம், டெல்லியில் தலா ஒருவர் என நாடு முழுவதும் மேலும் 30 பேர் இறந்துள்ளனர்.
இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,22,223 ஆக உயர்ந்தது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,862 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 4 கோடியே 25 லட்சத்து 21 ஆயிரத்து 341 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16,522 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 649 அதிகம் ஆகும்.
இதற்கிடையே மக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 187 கோடியே 71 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் நேற்று 3,64,210 டோஸ்கள் அடங்கும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி நேற்று 3,02,115 மாதிரிகளும், இதுவரை 83.50 கோடி மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.