சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியில் பூங்காவினுள்ள 16 விலங்குகளின் 24X7 நேரலை செய்தல் மக்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது மற்றும் இதுவரை 6 கோடி பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளதாக வனத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பதிலளித்து புதிய அறவிப்புகளை வெளியிட்டனர். முன்னதாக கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். வனத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில், மாநிலத்தின் முக்கியத் திட்டங்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள்.
தேக்கு மரத் திட்டங்கள்
2017-2018 ஆம் ஆண்டு முதல், 8 ஆண்டு காலத்திற்கு 6,000 ஹெக்டேர் பரப்பில் தேக்க மரத்தோட்டங்களை வளர்க்கும் இத்திட்டமானது ரூ.52.64 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020-2021 வரை ரூ.24.05 கோடி செலவில் 4,745 ஹெக்டேர் பரப்பளவில் 9,49,000 மரக்கன்றுகள் நடப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சந்தன மரத் தோட்டங்கள்
நமது மாநிலத்தில் ஜவ்வாது மலை, சேர்வராயன் மலை, கொல்லி மலை, பச்சைமலை மற்றும் சித்தேரி மலை ஆகிய பகுதிகள் பாரம்பரியமாக சந்தன மரங்கள் வளரும் பகுதிகளாக அமைந்துள்ளன. எனவே பாரம்பரிய சந்தன மரப் பகுதிகளில் வளர்ந்து வரும் சந்தன மரங்களின் இருப்பை மேம்படுத்தும் வகையில் 2015-2016 முதல் 2024-2025 வரையிலான 10 ஆண்டு காலத்திற்கு காப்புக்காடுகளில் சந்தன மரத்தோட்டங்களை வளர்க்கும் திட்டம் ரூ.100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2017-2018 ஆம் ஆண்டு வரை இத்திட்டத்தின் கீழ் ரூ.8.94 கோடி செலவில் சுமார் ரூ.7.10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
வன உயிரினங்களால் ஏற்படும் பாதிப்பிற்கு இழப்பீடு வழங்குதல்
மனித உயிரிழப்புகள், பயிர்ச்சேதம் மற்றும் உடைமைகளுக்கு வன உயிரினங்களால் ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வனத்துறை வழங்கி வருகிறது. 2021-2022 ஆம் ஆண்டில், மாநிலத் திட்டத்தின் மூலம் ரூ.10 கோடியும், பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்தளிக்கும் திட்டங்களின் கீழ் ரூ.1.26 கோடியும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காப்புக் காடுகளில் கான்கிரீட் சுற்றுச்சுவர் மற்றும் உயிர்வேலி அமைத்தல்
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காப்புக்காடுகளை ஆக்கிரமித்தல் மற்றும் திடக்கழிவு குப்பைகள் கொட்டுவதிலிருந்து பாதுகாக்க கான்கிரீட் சுற்றுச்சுவர் மற்றும் உயிர்வேலி அமைக்கும் திட்டம் ரூ.25 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 23.10 கி.மீ. நீளத்திற்கு கான்கிரீட் சுவர் மற்றும் 141 கி.மீ. நீளத்திற்கு உயிர்வேலி அமைக்கும் பணிகள் ரூ.18.40 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டன. 2021-2022 ஆம் ஆண்டில் இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக ரூ.257.435 லட்சம் ஒப்பளிக்கப்பட்டு திட்டப் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவினை மேம்படுத்துதல்
இணையதளப் பயனர்களின் எளிதான அணுகலுக்காக, BOT அமைப்பு – தொடர்பு கொள்ள உயிரியல் பூங்காவின் இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனித்துவமான இணையதள நுழைவுச்சீட்டுகளுக்கு விரைவு தகவல் குறியீடு (QR Code) உருவாக்கப்பட்டுள்ளது. இணையதளப் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு சரியான நேரத்தில் பதிலளிக்க டேஷ்போர்டு (Dash Board) உதவிப் பலகை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளம் மூலம் விலங்குகளைத் தத்தெடுப்பதும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்திலும் கூட, உயிரியல் பூங்கா மக்களுடன் மெய்நிகர் தளம் மூலம் இணைந்திருந்தது. மெய்நிகர் உயிரியல் பூங்கா தூதர் திட்டம், வனவிலங்கு பாதுகாப்பு சிக்கல்கள் குறித்த வலைப்பதிவுகள், போட்டிகள் மற்றும் முக்கியமான வனஉயிரின நாட்களில் நிகழ்வுகள் போன்றவைகள் நடத்தப்படுகிறது. உயிரியில் பூங்காவினுள்ள 16 விலங்குகளின் 24X7 நேரலை செய்தல் மக்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது மற்றும் இதுவரை 6 கோடி பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர்.