கோவை வடவள்ளியில் மின்கம்பியை மிதித்து சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்தின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வடவள்ளி பகுதியில் தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாக பூங்காவில் நேற்றிரவு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் லட்ஷணன், அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தான். இதற்கு குடியிருப்பு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் எனக்கூறி அச்சிறுவனின் பெற்றோர் பிரதீஷ் – சுகன்யா, காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், வழக்குப் பதியாமல் காலந்தாழ்த்தியதாக பெற்றோர் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், தற்போது சட்டப்பிரிவு 304ஏ, அதாவது அஜாக்கிரதையாக இருந்து மரணம் விளைவித்தல் பிரிவின் கீழ் தோட்டக்காரர், எலக்ட்ரீஷியன் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்தின் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
“நேற்றில் இருந்து என் புள்ள தனியா இருக்கிறான். மார்சுவரியில் என் புள்ளைய போட்டுட்டு வாங்க முடியாம இருக்கிறோம். தயது செய்து எஃப்.ஐ.ஆர் போட்டுவிட்டு என் பிள்ளைய என் கிட்ட கொடுத்திடுங்க. அய்யோ என் புள்ளைய வாங்கி கொடுங்க. எங்க புள்ளைய விட்டுட்டு இப்படி தெருவில நிக்குறோமே” என்று அந்த சிறுவனின் தாய் கதறி அழும் காட்சிகள் நெஞ்சை உலுக்கும் வண்ணம் உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM