டோக்கியோ:
ஜப்பானின் புகுவோகா நகரைச் சேர்ந்தவர் கேன் தனகா. உலகிலேயே மிகவும் வயதானவர் என்ற பெருமை பெற்ற இந்த மூதாட்டி, கடந்த 19ம் தேதி தனது 119வது வயதில் காலமானார். இத்தகவலை அரசு இன்று வெளியிட்டுள்ளது.
1903ஆம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி பிறந்த கேன் டனாகா, கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் தனது 116-வது வயதில் மிகவும் வயதான நபர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் 117 வயது மற்றும் 261 நாட்களை எட்டியபோது, ஜப்பானில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக வயதான நபராகவும் ஆனார்.
தனகா 19 வயதில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரது கணவர் ஹிடியோவும் அவர்களது மூத்த மகனும் 1937-ல் 2வது சீன-ஜப்பானியப் போரில் சண்டையிடச் சென்றபோது, நூடுல்ஸ் கடையை நடத்தினர். போருக்குப் பிறகு இந்த தம்பதியினர் அரிசி கேக் கடையை நடத்தினர்.
சோடா மற்றும் சாக்லேட் உள்ளிட்ட ருசியான உணவுகளை உண்பதுடன் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது தனது ஆயுளை நீட்டித்ததாக தனகா முன்னர் குறிப்பிட்டிருந்தார்.
தனகா காலமானதையடுத்து, பிரெஞ்சுப் பெண்மணியான லூசில் ராண்டன் இப்போது உலகின்மிக வயதான நபராக உள்ளார். அவரது வயது 118 ஆண்டு மற்றும் 73 நாட்கள் ஆகும்.
ஜப்பானின் மிக வயதான நபர் இப்போது ஒசாகா மாகாணத்தில் வசிக்கும் 115 வயதான ஃபுசா டாட்சுமி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.