சென்னை:
தமிழகத்தில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்க ஏதுவாக பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தம் கொண்டுவந்து சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா மீது ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் செல்வ பெருந்தகை பேசும்போது, ‘மறைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரின் பெயரை குறிப்பிட்டு பேசினார்.
அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எப்படி பெயரை சொல்லி பேசலாம் என்றனர். உடனே சபாநாயகர் குறுக்கிட்டு மறைந்த முதல்வர் பெயரை சொல்லி பேச வேண்டாம். பெயரை குறிப்பிடாமல் பேசுங்கள் என்றார்.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கோவிந்தசாமிக்கும், அமைச்சர் பெரியகருப்பனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சர் சொன்ன கருத்துக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பதிலுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் எழுந்து ஆவேசமாக குரல் கொடுத்தனர். இருதரப்பினரும் ஆவேசமாக கைநீட்டி வாக்குவாதம் செய்ததால் அவையில் அமளி ஏற்பட்டது. அப்போது சபாநாயகரின் இருக்கை அருகே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, கே.பி.முனுசாமி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சென்று சபாநாயகரிடம் கேள்வி கேட்டனர்.
உடனே அவை முன்னவரான துரைமுருகன் பேசுகையில், ‘அத்துமீறி நடந்து கொள்ளும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சபை காவலர்களை வைத்து வெளியேற்ற வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.
அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்வதற்காக என்ன வாய்ப்புள்ளது என காரணம் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இவ்வாறு நடந்து கொள்வதாக குறிப்பிட்டார்.
அப்போது சபாநாயகர் கூறுகையில், ‘அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரவர் இடத்துக்கு சென்று அமருங்கள். சபையை நடத்த ஒத்துழைப்பு தாருங்கள்’ என்றார்.
உடனே ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தபிறகு ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றைய தினம் சட்டமன்ற நடவடிக்கையில் அ.தி.மு.க. சார்பாக உறுப்பினர் கோவிந்தசாமி எழுந்து பேச முற்பட்டபோது அமைச்சர் பெரிய கருப்பன் மரியாதை குறைவாக பேசிய காரணத்தால் அ.தி.மு.க. சார்பாக அமைச்சர் பெரிய கருப்பனை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.
துணைவேந்தர் நியமனம் தொடர்பாக சட்ட மசோதா கொண்டுவந்ததில் சந்தர்ப்பத்துக்கு தகுந்தாற்போல் தி.மு.க. இரட்டை வேடம் போடுவதைத்தான் இது காட்டுகிறது.
இந்திய அரசியல் சட்டத்தில் கவர்னருக்கு என்று ஒரு தனிப்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த அதிகாரத்துக்குட்பட்டு தான் யார் கவர்னராக இருந்தாலும் செயல்பட முடியும். அரசியல் அமைப்பு சட்டத்துக்கு புறம்பாக எந்த கவர்னரும் செயல்பட முடியாது.
கவர்னர் தான் துணை வேந்தர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை. ஆனால் பல்வேறு கருத்துக்கள் இருக்கிறது. அரசு நியமிக்க வேண்டும் என்ற கருத்தும், கவர்னர் நியமிக்க வேண்டும் என்ற கருத்தும் இருக்கிறது. அதை தமிழ்நாடு அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.