இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு மூலம் ஆபாசமாக பேசி பண மோசடி செய்த வழக்கில் கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைகப்பட்ட பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு மூலம் ஆபாசமாக பேசி வீடியோக்களை பதிவேற்றி பண மோசடி செய்த வழக்கில் பப்ஜி மதன் என்கிற மதன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், பப்ஜி மதன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட பப்ஜி மதன் தன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், பப்ஜி மதன் தரப்பில் கூறியிருப்பதாவது: “மாநிலத்தில் என்னால் எந்த சட்ட ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை. அரசால் தடை செய்யப்பட்ட செயலியை நான் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ள பப்ஜி மதன் தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அளித்த கோரிக்கையை உரிய காலத்தில் காவல்துறை பரிசீலிக்கவில்லை என்பதை ஏற்று பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ததன் மூலம், அவர் மீதான மற்ற வழக்குகளிலும் பப்ஜி மதன் ஜாமீன் பெற்று வெளியே வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“