நாள் கூலி அடிப்படையில், வனத்துறைப் பணிகளை மட்டுமே செய்து வந்த பழங்குடியின மக்கள், சுயதொழில் முனைவோராய் மாறி வருகின்றனர். மாற்றத்தின் காரணம் அறிவோம்.
பழங்குடியினருக்கு உதவும் ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத்துறை நீலகிரி மாவட்டம் முதுமலை வனத்தில் விலங்குகளுக்கு மட்டுமல்லாமல் வனத்துறையினருக்கும் தலைவலியாக இருப்பது உன்னிச் செடிகள். வன விலங்குகளுக்குத் தேவையான உணவுத் தாவரங்கள் வளர்வதை அருகில் உள்ள இந்த உன்னிச் செடிகள் தடுத்துவிடுகின்றன. இந்த உன்னிச் செடிகளை அப்புறப்படுத்த பல லட்ச ரூபாய் நிதியை வனத்துறை ஒதுக்கி வருகிறது. இந்த உன்னிச் செடிகளை அப்புறப்படுத்தும் பணியில் முதுமலை வனப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். வனத்திலிருந்து எடுத்துவரும் உன்னிச் செடிகளை வாழ்வாதாரத்தை பெருக்கும் கருவியாக பழங்குடியின மக்கள் மாற்றியுள்ளனர்.
வனத்துறையின் அனுமதியுடன் உன்னிச் செடிகளை வெட்டி அதன் குச்சிகளைக்கொண்டு நாற்காலி, சோபா உள்ளிட்ட பொருட்களை தயாரித்து வருகின்றனர் பழங்குடியின மக்கள். 5 ஆண்டுகளுக்கு முன்பு முதுமலை வனப்பகுதியில் வசிக்கக்கூடிய இந்த பழங்குடியின மக்களுக்கு உன்னிக் குச்சிகளைக் கொண்டு பயன்தரும் பொருட்களை தயாரிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. அதனைப் பயன்படுத்தி பொருட்களை தயாரித்து அவர்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
பழங்குடியின மக்களின் இந்தத் தொழிலுக்கு உதவும் வகையில், அவர்களை குழுவாக இணைத்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர். அதன்மூலம் பொருட்களை செய்யத் தேவையான உபகரணங்களை வாங்கி அவர்கள் பயனடைந்து வருகின்றனர். பழங்குடியின மக்களின் இந்தப் புதிய தொழில், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி வகுப்பதோடு, முதுமலை வனப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கும் பேரூதவியாகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM