பொது இடத்தில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த விஷயங்களை ஓதுவது என்பது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விஷயமாக மாறும் என அரசாங்கம் நினைப்பது நியாயம் ஆகும் எனவே பொறுப்புள்ள பதவிகளில் இருப்பவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நவ்நீத் கவுர் ரானா மற்றும் அவரது கணவர் சட்டமன்ற உறுப்பினர் ரவி ரானாவுக்கு அனுமன் சாலிசா விவகாரத்தில் மும்பை உயர்நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.
அனுமன் சாலிசா எனப்படும் அனுமன் மந்திரங்களை மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீட்டின் முன்பாக ஒலிபெருக்கிகள் வைத்து ஒலிக்க விடுவோம் என அறிவிப்பு வெளியிட்டு இருந்த சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் நவ்நீத் கவுர் ராணா மற்றும் அவரது கணவரான சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் ரவி ஆகியோரை மகாராஷ்டிரா மாநில காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இதனையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையில் தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரியும் தங்களை கைது செய்ய வந்த பொழுது அத்துமீறி நடந்துகொண்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இருவர் சார்பிலும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் ஒரு குறிப்பிட்ட தனி நபருடைய வீட்டின் முன்பாக ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த மந்திரங்களை ஓதுவோம் எனக்கூறுவது அந்த தனி நபருடைய அடிப்படை உரிமைகளை பறிக்கும் விஷயம் என்றும், மேலும் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த விஷயங்களை பொதுவெளியில் மேற்கொள்ளும் பொழுது அது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தலாம் என மாநில அரசு நினைத்து அதன் மீது நடவடிக்கை எடுப்பது என்பது நியாயமான விஷயம்தான் எனவே இந்த மனுக்களை தாங்கள் விசாரிக்க முடியாது என நீதிபதிகள் கூறினர்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் போன்ற பொறுப்புகளை வகிப்போர் அதற்கேற்றார்போல பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM