"திராவிட மாடல் சிலருக்கு எரிச்சலைத் தருகிறது" – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திராவிட மாடல் சிலருக்கு எரிச்சலைத் தருகிறது. திராவிட மாடல் ஆட்சி தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே முன்மாதிரியாக உள்ளது என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

நீட் தேர்வு எதிர்ப்பு, தேசியக் கல்விக்‌கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு ஆகியவற்றை முன்னிறுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மேற்கொண்ட 21 நாட்கள் பிரச்சாரப் பெரும் பயண நிறைவு விழா பெரியார் திடலில் நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்நிகழ்வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா ராஜன் மற்றும் துணை மேயர் மகேஷ்குமார், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
image

இந்த விழாவில் பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ” பெரியார் திடலுக்கு நான் வந்திருப்பது புதிதல்ல; என் தாய் வீட்டுக்கு வந்திருக்கிறேன். 90 வயதுக்கு மேல் தான் பெரியார் அதிகமான கூட்டங்களில் பேசியிருக்கிறார். அவரைப்போலவே 89 வயதில் கி.வீரமணி  உழைத்துக் கொண்டிருக்கிறார் இன்றைய சூழலில் இன உணர்வோடு இளைஞர்கள் திரள வேண்டும். திராவிட மாடல் சிலருக்கு எரிச்சலைத் தருகிறது. பெரியார் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படுவது சிலருக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது.திராவிட மாடல் ஆட்சி தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே முன்மாதிரியாக உள்ளது

திமுகவும் திராவிட கழகமும் ஒட்டியிருப்பது பலருக்கு எரிச்சலை தருகிறது, கறுப்பும் சிவப்பும் யாராலும் பிரிக்க முடியாது. அனைவரும் படிப்பதற்கு தடை விதிக்க பார்க்கிறார்கள்; அதற்காக கொண்டு வந்தது தான் நீட் தேர்வு தேசிய கல்விக்கொள்கை. ஜெயலலிதா இருந்தவரை நீட் வரவில்லை… இருண்ட ஆட்சி நடத்திய இரட்டையர்கள் தான் கொண்டு வந்தார்கள். ஆளுநர் வேலை என்பது மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது அல்ல, குடியரசு தலைவருக்கு மசோதாவை அனுப்பும் தபால்காரர் வேலை தான். நாங்கள் கேட்பது நீட் சட்ட முன்வடிவுக்கான ஒப்புதல் அல்ல; குடியரசு தலைவருக்கு அனுப்பத்தான் சொல்கிறோம்
அஞ்சல்துறை ஊழியரின் பணியைக் கூட செய்யாமல் இருப்பது ஆளுநருக்கு அழகல்ல. மக்களை விட ஆளுநர் அதிகாரம் மிக்கவர் என்ற எண்ணம் இருந்தால் அதை மாற்றிக்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.
Stalin, Vaiko condemn Governor inaction - DTNext.in
இந்த விழாவில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,  “பல்கலைக்கழக துணைவேந்தரை அரசே நியமித்து கொள்ளலாம் என்ற பெரிய சாதனை நிகழ்த்தி விட்டு ஸ்டாலின் இங்கே வந்துள்ளார். பெண்களும் ஓதுவார்கள் ஆகலாம் என்ற பெரும் புரட்சியை செய்திருக்கிறார் ஸ்டாலின். முத்துவேல் கருணநிதி ஸ்டாலின் என்று சொல்லும் போது I belongs to Dravidian Stock என்று அண்ணா நாடாளுமன்றத்தில் முழங்கியது தான் நினைவுக்கு வந்தது. நீட் தேர்வை ஒழிக்க ஸ்டாலினால் மட்டுமே முடியும். பெரியார் அண்ணா, கலைஞர் அனைவரும் விண்ணில் இருந்து  அவரை வாழ்த்துவார்கள்” என தெரிவித்தார்
மக்களின் சிந்தை குளிர்ந்த நல்லாட்சியை நாளும் தருகிறார்; இதுதான்  'திராவிடியன் மாடல்' - கி.வீரமணி புகழாரம்!

தி.க. தலைவர் கி.வீரமணி பேசும்போது, “தமிழகத்தில் மூட நம்பிக்கைகள் அதிகரிக்கிறது. மூடநம்பிக்கை ஒழிப்பு  சட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின்  57 A பிரிவின் படி இச்சட்டத்தை நிறைவேற்ற முடியும். ஏற்கனவே கர்நாடகா உள்ளிட்ட வெகு சில மாநிலங்களில் இச்சட்டம் உள்ளது.

எனவே இச்சட்டத்தை நிறைவேற்றி மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் தமிழகம் முன்னுதாரணமாக திகழ வேண்டுமென கோரிக்கைவிடுக்கிறேன். மசோதாக்களை எங்கு அனுப்ப வேண்டுமோ அங்கு அனுப்ப வேண்டும், இடையில் உள்ள தபால் காரர்கள் (ஆளுநர்) ஏன் திறந்து பார்க்க வேண்டும்?பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை சர்வதேச பன்னாட்டு தமிழ் வளர்ச்சி நாளாக அறிவிக்க வேண்டி கோரிக்கை விடுக்கிறேன்” என தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.