திருமணம் செய்து கொள்ள இளம் பெண்ணுக்கு தொந்தரவு பிரபல சினிமா தயாரிப்பாளர் வாராகி கைது: வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நடவடிக்கை

சென்னை: திருமணம்  செய்து கொள்ளுமாறு இளம் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்து தொந்தரவு செய்ததாக சினிமா தயாரிப்பாளர் வாராகியை வடபழனி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ராணி(31)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், நான் வசித்து வரும் குடியிருப்பில் சினிமா தயாரிப்பாளர் வாராகி வசித்து வருகிறார். இவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி பல மாதங்களாக நான் எங்கு சென்றாலும் பின் தொர்ந்து தொந்தரவு செய்து வருகிறார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் எனக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே என்னை திருமணம் செய்து கொள்ளும் படி தொந்தரவு செய்து மிரட்டி வரும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இளம் பெண் அளித்த புகாரின் படி வடபழனி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சினிமா தயாரிப்பாளர் வாராகி இளம் பெண்ணை பின் தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளும் படி கட்டாயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. மேலும், வாராகி மீது சேலையூர் உட்பட 4 காவல் நிலையங்களில் மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து, வாராகி மீது பெண் வன்கொடுமை சட்டம், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.