புதுடில்லி : “பல்கலை பொது நுழைவுத் தேர்வு மாநிலங்களின் உரிமையை பறிக்காது,” என, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அனுப்பியுள்ள கடிதம்:
மத்திய அரசின், ‘கியூட்’ எனப்படும் பல்கலை பொது நுழைவுத் தேர்வு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உரிமையை ஒருபோதும் பறிக்காது. கல்வி மேம்பாட்டுக்காகவே இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுதும் மாணவர்கள் ஒரே விண்ணப்பம் வாயிலாக ஒன்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது மட்டுமின்றி, 13 மொழிகளில் தேர்வு எழுதலாம்.
ஒவ்வொரு பல்கலைக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை என்பதால் செலவும் குறையும். இந்த தேர்வு, ‘தேசியக் கல்விக் கொள்கை -2020’ன்படியே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.தமிழக சட்டசபையில், 12ம் தேதி, பல்கலை பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Advertisement