பாரிஸ் : பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மேக்ரான், 44, இரண்டாவது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதன் வாயிலாக கடந்த, 20 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று பதவியை தக்க வைத்துக் கொண்ட முதல் அதிபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஐரோப்பிய நாடான பிரான்சின் அதிபர் பதவி அடுத்த மாதம் முடிவுக்கு வர உள்ளது.
இதையடுத்து கடந்த 10ம் தேதி தேர்தல் நடந்தது. இதில், எல்.ஆர்.இ.எம்., எனப்படும் லா ரிபப்ளிக் என் மார்செல் கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அதிபருமான இமானுவேல் மேக்ரான், பிரதான எதிர்க்கட்சியான ஆர்.என்., எனப்படும் நேஷனல் ரேலி கட்சியின் மரின் லீ பென், 53, உட்பட 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.இதில் மேக்ரான் 27.8 சதவீதமும், லீ பென் 23.2 சதவீத ஓட்டுகள் பெற்றனர். அந்நாட்டு சட்டப்படி அதிபர் தேர்தலில் பெற்று பெறுபவர் 50 சதவீத ஓட்டுகள் பெற்றிருக்க வேண்டும்
இதையடுத்து, முதல் இரண்டு இடங்களை பிடித்த மேக்ரான் – லீ பென் இடையே இரண்டாவது கட்ட தேர்தல் நேற்று முன் தினம் நடந்தது. இதில் இமானுவேல் மேக்ரான் 58 சதவீதத்துக்கு மேல் ஓட்டுகள் பெற்று மீண்டும் அதிபராக தேர்வானார். கடந்த 20 ஆண்டுகளில் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற முதல் அதிபர் என்ற பெருமையை மேக்ரான் பெற்றுள்ளார். லீ பென் 42 சதவீத ஓட்டுகள் பெற்றார்.கடந்த 2017ல் நடந்த அதிபர் தேர்தலிலும், மேக்ரான் – லீ பென் இடையே கடும் போட்டி நிலவியது.
அப்போது, மேக்ரான் 66.1 சதவீத ஓட்டுகளும், லீ பென் 33.9 சதவீத ஒட்டுகளும் பெற்றனர். இந்த முறை, லீ பென் தோல்வி அடைந்தாலும் அவர் பெற்ற ஓட்டுகள் சதவீதம் அதிகரித்துள்ளது. இவர் மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.வெற்றி பெற்ற இமானுவேல் மேக்ரானுக்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘பிரான்ஸ் அதிபராக என் நண்பர் இமானுவேல் மேக்ரான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள்.’இமானுவேல் உடன் இணைந்து, இந்தியா — பிரான்ஸ் உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன்’ என, குறிப்பிட்டு உள்ளார்.
Advertisement