சென்னை: நாம் அனைவரும் எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதுடன், தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது: இந்த அரசு பொறுப்பேற்றபோது கரோனா 2-ம் அலை உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த இக்கட்டான சூழலில், தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் உடனே எடுத்து,அதனை உங்களின் கடும் உழைப்பால் ஓரளவுக்கு கட்டுப்படுத்தியுள்ளோம். அதனால் ஏற்பட இருந்த பெரும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் பெருமளவு குறைத்துள்ளோம்.
தடுப்பூசி போடும் பணிகள்
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்த தகுதியுள்ள 6.33 கோடி பேரில், 74.75 சதவீதம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. 91.5 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு, தகுதியுள்ளோரில் 41.66 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
அடுத்து, ஒமைக்ரான் வைரஸால் ஏற்பட்ட 3-வது அலையின் தாக்கம் பெருமளவில் இல்லை. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சிறிதளவு உயர்ந்தாலும் கூட, இந்தத் தொற்று கடும் நோயையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தவில்லை. இவ்வாறு நாம் அனைவரும் இணைந்து எடுத்த முயற்சிகளால் கரோனா தாக்கத்தில் இருந்து வெளிவந்து இயல்பு வாழ்க்கைக்கு நாம் திரும்பி வருகிறோம். மக்களின் வாழ்வாதாரமும் படிப் படியாக உயர்ந்து வருகிறது.
நமது தலையாயக் கடமை
இந்த சூழலில்தான் டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஓரு வாரமாக மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. ஒமைக்ரான் வைரஸின் புதிய வகையால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர். தற்போது உயிரிழப்புகள் உயரவில்லை என்பது சற்று ஆறுதலாக உள்ளது.
இருப்பினும் நாம் அனைவரும் எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். இந்த பெருந்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த நம்மிடம் உள்ள ஆயுதம் தடுப்பூசியாகும். தடுப்பூசி செலுத்திக் கொள்வோரில் சிலருக்கு தொற்று ஏற்பட்டாலும் கூட, உயிரிழப்பு ஏற்படுவது மிக மிகக் குறைவு. எனவே, தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்வதே நமது தலையாயக் கடமையாகும்.
குறிப்பாக 2-வது தவணை தடுப்பூசி போடாதவர்கள் தமிழகத்தில் 1.48 கோடி பேர் உள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதி யுடைய11.68 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இனிவரும் வாரங்களில் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
பொது இடங்களிலும், பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களிலும் முகக்கவசம் அணிவதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும். பொருளாதார வளர்ச்சி தடைபட்டுவிடாமலும் மக்களின் வாழ்வாதாரம் மீண்டும் பாதிக்கப்பட்டுவிடாமலும் இருப்பதை உறுதி செய்யக்கூடிய அதே நேரத்தில், இந்தப் பெருந்தொற்றினால் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதே நமதுகுறிக்கோள். எனவே தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்து அரசுத் துறைகளும், மாவட்ட ஆட்சியர்களும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.