வாஷிங்டன் :
அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ந்தேதி பயணிகள் விமானங்களை கடத்திய அல்-கொய்தா பயங்கரவாதிகள் அவற்றை நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையமான இரட்டை கோபுரத்தின் மீதும், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் மோதி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 3 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர். இதற்கு பின்னணியில் இருந்து செயல்பட்ட அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை 10 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க படைகள் பாகிஸ்தானில் வைத்து சுட்டு கொன்றன. பின்லேடனை பிடிக்கும் பணியில் அமெரிக்காவின் நேவி சீல் படைகள் ஈடுபட்டன.
அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் 2-வது தாக்குதல் ஒன்றையும் நடத்த ஒசாமா பின்லேடன் திட்டமிட்ட ரகசிய தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. பின்லேடனை உயிருடனோ அல்லது சுட்டு பிடிப்பதற்கான பணிக்காக அமெரிக்காவின் நேவி சீல் படையை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கொண்ட குழுவானது, பின்லேடனை கொன்ற பின்பு ஆயிரக்கணக்கான பக்கங்களை கொண்ட தனிப்பட்ட கடிதங்கள் மற்றும் குறிப்புகளை கைப்பற்றி வகைப்படுத்தியுள்ளன.
இவற்றை ஆய்வு செய்த இஸ்லாமிய பெண் பண்டிதரான நெல்லி லகோத் பேட்டி ஒன்றில் கூறும்போது, செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின் அமெரிக்கர்கள் எப்படி எதிர்வினையாற்றினர் என்று பின்லேடன் ஆச்சரியப்பட்டு உள்ளார்.
அமெரிக்கர்கள் தெருக்களில் இறங்கி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி, முஸ்லிம் அதிகம் வசிக்கும் பகுதியில் இருந்து வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தவார்கள் என பின்லேடன் நினைத்து உள்ளார். ஆனால், அவரது கணக்கு தவறாகி விட்டது.
அமெரிக்கா அவரை தேடுகிறது என அறிந்ததும், அல்-கொய்தா அமைப்பினருடன் பின்லேடன் 3 ஆண்டுகளாக தொடர்பில் இல்லாமல் இருந்துள்ளார். ஆனால், 2004ல் மீண்டும் அந்த பயங்கரவாத குழுவில் இணைந்துள்ளார். அமெரிக்காவின் மீது தனது புதிய தாக்குதல் பற்றி குழு உறுப்பினர்களிடம் தெரிவித்து உள்ளார்.
9/11 தாக்குதலை மீண்டும் நடத்த பின்லேடன் ஆர்வம் காட்டினார். ஆனால், விமான நிலையங்களில் கடுமையான பாதுகாப்பு விசயங்கள் கடைப்பிடிக்கப்பட்டன. இதனை கவனத்தில் கொண்டு பயணிகள் விமானத்திற்கு பதிலாக சார்ட்டர் விமானம் ஒன்றை கொண்டு அமெரிக்கா மீது அடுத்த தாக்குதலை நடத்தலாம் என்று அந்த அமைப்பின் சர்வதேச பயங்கரவாத குழுவுக்கு பின்லேடன் கடிதம் ஒன்றில் தெரிவித்து உள்ளார்.
விமானம் வழியே தாக்குதல் நடத்துவது மிக கடினம் என்றால், அமெரிக்க ரெயில்வே மீது குறிவைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். சிவில் என்ஜினீயரிங் படித்த பின்லேடன், அமெரிக்கா மீது எப்படி சரியாக தாக்குதல் நடத்த வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளார். ரெயில் தண்டவாள பகுதியில் 12 மீட்டர் அளவுக்கு வெட்டி எடுக்கும்படி கூறியுள்ளார்.
இதனால் ரெயில் தடம் புரண்டு, நூற்றுக்கணக்கானோர் செத்து மடிவார்கள் என்பது பின்லேடனின் திட்டம். இதற்காக கம்பிரசர்களை பயன்படுத்துங்கள். இரும்பு கருவிகளையும் பயன்படுத்துங்கள் என்று பின்லேடன் தனது சகாக்களிடம் கூறியுள்ளார்.
எனினும், அதிர்ஷ்டவசத்தில், பின்லேடனால் இந்த திட்டங்களை ஒருபோதும் நிறைவேற்ற முடியாமல் போனது என்று லகோத் கூறியுள்ளார்.
இதுதவிர, கடந்த 2010ம் ஆண்டு மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க பகுதிகளில், கச்சா எண்ணெய் டேங்கர்கள் மற்றும் பெரிய கடல்வழி பகுதிகளிலும் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.
இதற்காக மீனவர்களை போன்று காட்டி கொண்டு துறைமுக பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.ரேடாரில் இருந்து தப்புவதற்காக குறிப்பிட்ட படகுகளை எங்கு வாங்க வேண்டும். வெடிபொருட்களை கடத்தி செல்ல அந்த படகுகளை எப்படி பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட விவரங்களை தனது குழுவுக்கு பின்லேடன் விவரமுடன் தெரிவித்து உள்ளார். உண்மையில், அமெரிக்க பொருளாதாரம் தனது கைக்குள் இருக்க வேண்டும் என்று பின்லேடன் விரும்பினார் என்று லகோத் கூறியுள்ளார்.