ரூ.25 கோடி செலவில் கோயம்பேடு சந்தை கரிம மாசு இல்லாத வளாகமாக உருவாக்கப்படும்: அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு

சென்னை: கோயம்பேடு சந்தை ரூ.25 கோடி செலவில் கரிம மாசு இல்லாத வளாகமாக உருவாக்கப்படும் என்றுசுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறினார்.

சட்டப்பேரவையில் நேற்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எம்எல்ஏ-க்களின் கோரிக்கைகளுக்கு பதில்அளித்து அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசியதாவது:

சாயப் பட்டறைகளால் மாசு ஏற்படுவதைத் தடுக்க பொது சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டுவந்தார். தற்போது தமிழகத்தில் 136 பொது சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன.

ஓஎன்ஜிசி நிறுவனம் அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகளை அமைக்க முயற்சித்தபோது, அதை ஆரம்ப நிலையிலேயே நிராகரித்தவர் முதல்வர் ஸ்டாலின். அதேபோல, தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதமரிடம் நேரில் முறையிட்டார்.

கடற்கரைகள் மேம்பாடு

ராமநாதபுரம் குஷி கடற்கரையும், நாகப்பட்டினம் நெய்தல் கடற்கரையும் நீலக்கொடி சான்றிதழ்பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த கடற்கரைகளை மேம்படுத்துவதற்காக தலா ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், தமிழக முதல்வர் கொண்டுவந்த மஞ்சப்பை திட்டம் மூலம் பிளாஸ்டிக் பயன்பாடு 25 சதவீதம் குறைந்திருக்கிறது.

பிளாஸ்டிக் தீங்கு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மரங்களின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு 10,000 குறுங்காடுகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு குறுங்காடும் 1,000 மரங்களை உள்ளடக்கியது.

மாணவர்களிடையே பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் வகையில்,பசுமைப் பள்ளித் திட்டம் செயல்படுத்தப்படும். முதல்வரின் பசுமை இயக்கத்தை நடைமுறைப்படுத்த 25 பள்ளிகளுக்கு தலா 20 லட்சம்வீதம் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும்.

காலநிலை மாற்ற இயக்கம்

மாவட்ட அளவில் காலநிலைமாற்ற இயக்கம் செயல்படுத்தப்படும். இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைவராக இருப்பார். மாவட்டவன அலுவலர் ஒருங்கிணைப்பாளராகவும், காலநிலை மாற்ற அலுவலராகவும் செயல்படுவார்.

பிளாஸ்டிக் தீங்கு குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்த, மீண்டும் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில் கண்காட்சி விழிப்புணர்வுத் திட்டம் ரூ.13 கோடியில் செயல்படுத்தப்படும்.

தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பசுமை மதிப்பீடு செய்யப்படும். இந்த திட்டம் ரூ.2.50 கோடியில் நிறைவேற்றப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் மற்றும் நாகப்பட்டினத்தில் புதியமாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்கள் உருவாக்கப்படும்.

ஆசியாவிலேயே மிகப் பெரிய சந்தை வளாகங்களில் ஒன்றான சென்னை கோயம்பேடு சந்தை வளாகம் கரிம மாசு இல்லாத வளாகமாக உருவாக்கப்படும். இந்த திட்டத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து ரூ.25 கோடியில் செயல்படுத்தும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.