சென்னை: வாழை மரங்கள், வாழை நார்களை உள்ளடக்கிய தொழில்களைத் தொடங்குவதற்கு தமிழக அரசுக்கு ஒரு திட்டம் இருக்கிறது என்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்பேது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று எரிசக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. இதற்கு பதிலளித்து அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சி.வி.கணேசன் ஆகியோர் புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளனர். முன்னதாக காலை 10 மணிக்கு கேள்வி நேரம் தொடங்கியது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
அப்போது, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், மேட்டுப்பாளையம் தொகுதியில் உள்ள சிறுமுகை, காரமடை ஆகிய பகுதிகளில் வாழை அதிகமான அளவில் விளைகிறது. இந்த வாழையிலிருந்து நார், வாழைத் தண்டிலிருந்து பிஸ்கட், வாழைக் கிழங்கை சித்த மருத்துவத்திற்குப் பயன்படுத்தலாம். எனவே வாழையை வைத்து ஒரு தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்பது அந்த தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில், ஐஐடி மூலம் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை பெறப்பட்டுள்ளது. எனவே மேட்டுப்பாளையம் தொகுதியில் வாழை தொழிற்சாலை தொடங்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வாழை தொடர்புடைய தொழிற்சாலைகளுக்கு உலகளாவிய சந்தை ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியம். நெல்லை மாவட்டத்தை ஒட்டியிருக்கக்கூடிய திருவைகுண்டம் பகுதியில் நிறைய வாழை மரங்கள் உள்ளன. அங்கிருந்துதான், தமிழகத்துக்கு தேவையான வாழை பெரும்பகுதி வருகிறது. எனவே அதை மையமாக வைத்துக்கூட இந்த வாழை மரங்கள் அல்லது வாழை நாரை மையமாக வைத்து தொழில் தொடங்குவதற்கு தமிழக அரசுக்கு ஒரு திட்டம் இருக்கிறது.
பொதுவாக தொழிற்துறையைப் பொருத்தவரை அரசு தொழிலைத் தொடங்குவதைவிட, தொழில்முனைவோர்கள் முதலீட்டோடு அதனை தொடங்க வந்தால், அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தரக்கூடிய துறையாக இந்த துறை வந்துள்ளது. எனவே தொழில்முனைவோர்கள் வந்தால் அதுபோன்ற திட்டங்களைச் செய்யலாம் அல்லது ஐஐடி போன்ற நிறுவனங்களில் யாராவது ஒரு Incubation centre-ஐ வைத்துக்கொண்டு, ஸ்டார்ட்அப் போன்ற நிறுவனங்களை இந்த துறையில் தொடங்க முன்வந்தால் அரசின் சார்பாக அதற்கு அனைத்து விதமான வசதிகளையும் செய்து அந்த தொழில்களை கொண்டு வருவதற்கான ஊக்குவிப்பினை தொழில்துறை நிச்சயமாக செய்யும் என்று அவர் கூறினார்.