தூங்கி எழுந்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆய்வில் பங்கேற்று தூங்குவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என்கிற மலாயா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு மலேசியாவில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கரும்பு தின்னக் கூலி கொடுப்பதைப் போல ஆய்வின் நிமித்தம் தூங்குதற்கு பணம் என்கிற அறிவிப்பால் ஈர்க்கப்பட்டு பலரும் அதற்குப் பதிவு செய்துள்ளனர்.
மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகம் தூக்கம் குறித்த ஆய்வு ஒன்றினை மேற்கொள்ளவிருக்கிறது. தூங்கி எழுந்த பிறகு உடலில் நிகழும் ஆரோக்கியமான மாற்றத்தைக் கண்டறிவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். சராசரி எடை கொண்ட, தூக்கம் தொடர்பான எவ்விதப் பிரச்னையும் இல்லாத, 20 – 40 வயதுடையவர்களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவிருக்கிறது. இந்த ஆய்வில் பங்கேற்போருக்கு தூங்குவது மட்டுமே வேலை. தூக்கத்தின் மூலம் அவர்கள் அடையும் புத்துணர்ச்சி எத்தகையது என்பது கண்காணிக்கப்பட்டுக்கொண்டே வரும்.
இந்த ஆய்வில் கலந்து கொண்டு தூங்குவதற்கு ஆட்கள் தேவை என மலாயா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு மலேசியாவில் பேசுபொருளாகியிருக்கிறது. அதற்கான முக்கிய காரணம் இந்த ஆய்வில் கலந்து கொள்வோருக்கு 1,500 ரிங்கிட் அதாவது இந்திய ரூபாய் மதிப்புபடி 26,500 ரூபாய் வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருப்பதுதான்.
எந்த வேலையும் இல்லாமல் வெறுமனே தூங்குவதற்குப் பணமா என பலரும் முந்தியடித்துக் கொண்டு இந்த ஆய்வில் பங்கேற்கப் பதிவு செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகமானதால் மலாயா பல்கலைக்கழகம் பதிவை நிறுத்தியிருக்கிறது.
முதல்கட்ட பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னரே அவர்கள் ஆய்வுக்குள் ஈடுபடுத்தப்படுவார்கள். 30 நாள்கள் இந்த ஆய்வு நடைபெறவிருக்கிறது.