துணை வேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து பறித்து மாநில அரசுக்கு அளித்து தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே போல, 25 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா அரசு தீர்மானம் நிறைவேற்றியபோது அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டி என்ன பதில் அளித்தார் என்று பார்ப்போம்.
அரசியல் விமர்சகர்கள் சில அரசியல் நிகழ்வுகளைக் குறிப்பிட்டு வரலாறு திரும்புகிறது என்று வர்ணிப்பார்கள். அது போல, தமிழக அரசியலிலும் முதலமைச்சர் – ஆளுநர் மோதல் சம்பவத்தில் வரலாறு திரும்புகிறது என்று கூறும் விதமாக அமைந்துள்ளது.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு, 1991-1996 வரை ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த முதல் ஆட்சிக் காலத்தில், 1993 – 1995 வரை ஜெயலலிதாவுக்கும் அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டிகும் இடையே நடந்த மோதல் சம்பவங்கள் அனைவருக்கும் தெரிந்த வரலாறு. 25 ஆண்டுகள் கழித்து, அதே போல, தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே நடைபெறும் மோதலைப் பார்க்கும்போது தமிழகத்தில் வரலாறு திரும்புகிறது என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஜனவரி 5, 1994-ல் தமிழகத்தில் அன்றைக்கு இருந்த மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருந்த ஆளுநரை நீக்கிவிட்டு, முதல்வரை வேந்தராக மாற்றுவதற்கான இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. அப்போது கல்வி அமைச்சராக இருந்த கே.பொன்னுசாமி கொண்டு வந்த அந்த மசோதாவில் துணைவேந்தர் பதவி நீக்கம் செய்யப்பட்டது.
ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கையை, அப்போது எல்.கே. அத்வானி, முலாயம் சிங் யாதவ், வி.என். காட்கில் ஆகியோர் தேசிய அளவில் விமர்சித்தனர். அன்றைக்கு ஜெயலலிதாவின் நடவடிக்கையை விமர்சித்தவர்களில் ஒருவரான தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், இந்த நடவடிக்கை அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால், பல்கலைக்கழக நிர்வாகத்தில் அரசியல் தலையீடு அதிகமாக இருக்கும் என்றும் அவர் வாதிட்டார்.
இதையடுத்து, இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டி இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் தரப்போவதில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டார். “அரசியல் தலைவர் முதலமைச்சர் வேந்தர் ஆனதும் யு.ஜி.சி அதன் 54% மானியத்தை நிறுத்தும். அதனால், மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை என்னால் அழிக்க முடியாது” என்று சென்னா ரெட்டி ஒரு பேட்டியில் கூறினார்.
மேலும், “என்.டி.ராமராவ் தெலுங்குப் பல்கலைக்கழகத்தைத் தொடங்கி தன்னை வேந்தராக அறிவித்துக் கொண்டார். இதற்காக நான் அவரை விமர்சித்தேன், நான் முதல்வர் ஆனதும், வேந்தர் பதவியைத் துறந்து பல்கலைக்கழக வேந்தர் பதவியை ஆளுநரிடம் கொடுத்தேன்” என்று அப்போது தமிழகத்தின் ஆளுநராக இருந்த சென்னா ரெட்டி குறிப்பிட்டார்.
ஆளுநர் – முதலமைச்சர் மோதல் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, ராஜ்பவன் அதிமுக அரசுடனான பிரச்னைகள் குறித்து விரிவான அறிக்கையை வெளியிட்டது. உடனடியாக, ஜெயலலிதா அரசு கடுமையாக பதிலடி கொடுத்து மறுப்பு அறிக்கையை வெளியிட்டது. ராஜ்பவன் மீதான சில குற்றச்சாட்டுகள் கற்பனையானது என்று குறிப்பிட்டது. ராஜ்பவனுடைய சில குற்றச்சாட்டுகள் கற்பனையானது என்று குறிப்பிட்டது.
ஒரு வருடம் கழித்து, ஏப்ரல், 1995 -இல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை சீர்குலைக்கும் விதமாக அரசியலமைப்பிற்கு முரணான வகையில் செயல்பட்ட ஆளுநர் சென்னா ரெட்டியின் குற்றச்சாட்டை திரும்பப் பெறுமாறு தமிழ்நாடு சட்டப்பேரவை கோரியது. அப்போது நிதியமைச்சராக இருந்த வி.ஆர். நெடுஞ்செழியன் முன்மொழிந்த தீர்மானம், அவையில் ஆளுநரின் நடத்தை குறித்த விவாதத்திற்கு தடை விதித்த விதியை விலக்கி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் தற்போது ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல ஆளுநர் தாமதம் செய்வதாக திமுக அரசு குற்றம் சாட்டி வருகிறது. இதனால், ஆளுநர் மாளிகை அளித்த தேநீர் விருந்தை, தமிழக அரசு புறக்கணித்தது.
இதனிடையே, டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக உள்ள சுதா சேஷய்யனின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, துணை வேந்தர் தேடுதல் குழு பரிந்துரைத்த 3 பேர்களின் பெயர்களைத் தவிர்த்துவிட்டு, சுதா சேஷய்யனின் பதவிக் காலத்தை இந்த ஆண்டு டிசம்பர் வரை நீட்டித்து ஆளுநர் உத்தரவிட்டார். அப்போதே, துணை வேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே பெரிய பிரச்னை உருவாகிவிட்டது.
தற்போதைய நடைமுறையின்படி, ஒரு தேர்வுக் குழு அமைக்கப்பட்டு அந்த தேர்வுக்குழுவால் பரிந்துரைக்கப்படும் மூன்று பெயர்களில் இருந்து ஒருவரை துணை வேந்தராக ஆளுநர் நியமிக்கிறார்.
இந்த நிலையில்தான், மாநில அரசின் 13 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்து பறித்து மாநில அரசே நியமிப்பதற்கான அதிகாரம் அளித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (ஏப்ரல் 26) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதாவின் அவசியம் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கினார். “ஆளுநர் என்பவர் மாநிலத்தின் நியமன நிர்வாகி. முதல்வர் உண்மையான நிர்வாகி. எனவே, முதலமைச்சரை பல்கலைகழகங்களின் வேந்தராக நியமிக்க வேண்டும்” என்று கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள, இந்த மசோதாக்கள் குஜராத், தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் உள்ள சட்டங்களை குறிப்பிடுகின்றன. இந்த மசோதாக்கள் துணை வேந்தர்களை நியமிக்க அந்தந்த மாநில அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“