எழுத்து என்ஜினியர் சுஜாதா! | புத்தம்புது காப்பி | திரைக்கதை எழுதலாம் வாங்க!

புத்தம்புது காப்பியின் இந்த வார அத்தியாயம் மதிப்புக்குரிய எழுத்தாளர், திரைக்கதையாசிரியர், கதை வசனகர்த்தா திரு.ரங்கராஜன் (சுஜாதா) அவர்களைப் பற்றியது.

எழுத்துத்துறை அதன் நீட்சியான சினிமாவைப் பற்றி பல்வேறு தலைப்புகளில் பேசிக் கொண்டிருந்தாலும், சினிமாவின் உள்ளார்ந்த தொழில்நுட்பத் தலைப்புகளைப் பற்றி பேசும் கட்டுரைகளும் புத்தகங்களும் அரிதிலும் அரிது. உதாரணத்துக்கு நம் புத்தம்புது காப்பி பகுதியில் திரைக்கதை என்னும் ஒற்றைத் தொழில்நுட்ப தலைப்பை பொருளாக்கி ஒவ்வொரு வாரமும் அத்தியாயங்களாக அதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே திரைக்கதையின் முக்கியத்துவத்தை, எல்லோருக்கும் தெரியும்படி, அதைப்பற்றி ’திரைக்கதை எழுதுவது எப்படி?’ என்று ஒரு புத்தகத்தையே எழுதியவர்தான் சுஜாதா அவர்கள். சினிமா மீதான ஆர்வம் எல்லோருக்கும் வரும். ஆனால், அதன் உள்ளார்ந்த எழுத்தின் மீதும், நுட்பங்கள் மீதும் எனக்கு ஆர்வம் வருவதற்கு, சுஜாதா அவர்களின் எழுத்துகள் பெரும் பங்காற்றி இருக்கின்றன. அவர் எழுதிய நாவல்கள், நாடகங்கள், அவர் பங்காற்றிய சினிமாக்களின் வசனங்கள் என நாளுக்கு நாள் அந்த ஆர்வம் மெருகேறியே வந்திருக்கிறது.

எனக்கு ஆறு வயது இருக்கும். எங்கள் அப்பா ஒரு தீவிர கமல் ரசிகர், அப்போ அவர் கூட்டிப் போன சினிமா தான் ’இந்தியன்’. அன்னைக்கு தேதிக்கு ஒரு ஆறு வயசு பையனா என் மனசுல பதிஞ்சு போன விசயங்கள் என்னனு கேட்டீங்கனா…

வெறும் ரெண்டு விரல அப்படி இப்படி திருப்பி வில்லன்களை சாய்க்குற விதம், அப்படி அடிச்சு முடிச்சதும் நெத்தில விழுற வெள்ளை முடிய ஒதுக்கி விடுற ஸ்டைல், ’மாயா மச்சீந்தரா’ பாட்டுல கமல் சிங்கமா, குதிரையா மாறுனது, ’கப்பலேறி போயாச்சு’ பாட்டுல கமலும் சுகன்யாவும் வர்ற கெட்டப் சேஞ்ச் கிராபிக்ஸ்… இதெல்லாம்தான்!

அந்த ஆறு வயசுல இருந்து இப்போ வரைக்கும் அந்தப் படத்தை 50 தடவைக்கு மேல் பார்த்துட்டேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்த என்னுடைய ரசனைக்கு ஏற்றபடி கதை, திரைக்கதை, பாடல்கள்னு பல அம்சங்களை நான் பிரமிச்சுப் பார்த்ததுண்டு.

அப்படி இப்பவும் அந்த படத்துல வியந்து பார்க்கற ஒரு முக்கியமான விஷயம் சுஜாதாவின் வசனங்கள். யார் வேணும்னாலும் வசனம் எழுதலாங்க. ஆனால், அந்தக் கதைய முழுசா புரிஞ்சுக்கிட்டு அதுல இருக்கிற கதாபாத்திரங்களோட நியாயங்களையும், அவங்களோட முரண்பாடுகளையும் கெடுக்காமல் வசனம் எழுதறதுதாங்க திறமை.

அப்படிப் பார்க்கும்போது சுஜாதா அவர்கள் இந்தியனுக்கு எழுதுன வசனங்கள் அவருடைய திறமைக்கு அவரே உருவாக்கிக்கிட்ட வெற்றிக் கோப்பை‌னு சொல்லலாம்.

Indian
Indian

சில முக்கியமான வசனங்களை இங்கு நான் குறிப்பிடணும்னு நினைக்கிறேன். படத்துல லஞ்சம் வாங்குற ஒரு அரசு மருத்துவர கடத்திட்டு போய் டிவி ஸ்டுடியோல வெச்சு மக்கள் முன்னாடியும் அந்த மருத்துவர்கிட்டயும் லஞ்சத்தைப் பத்தி பேசுற ஒரு காட்சி இருக்கும்.

அந்தக் காட்சியில இந்தியன் தாத்தா மருத்துவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்பார்.

“பக்கத்துல இருக்குற குட்டி குட்டி தீவு எல்லாம் முன்னேறிடுச்சு… எப்படினு தெரியுமா?”

அதுக்கு அந்த மருத்துவர், “அங்கெல்லாம் லஞ்சம் இல்லை !” அப்படின்னு ஒரு பதில் சொல்லுவார்.

நம்மல்ல சில பேர் கூட அதுதான் பதில்னு நினைச்சுருப்போம். ஆனால், அந்தப் பதிலுக்கு உடனே ஒரு அடி விழும். “அங்கேயும் லஞ்சம் இருக்கு. ஆனா, அங்கெல்லாம் கடமைய விட்டுக் கொடுக்கத்தான் லஞ்சம், இங்க மட்டும்தாண்டா கடமையை செய்யறக்கே லஞ்சம் கேக்குறீங்க” அப்படின்னு கூடவே ஒரு பதிலடியும் விழும். இப்படி கதையோட பல இடங்கள்ல சுஜாதா டச் இருக்கும்.

அதுக்கு உதாரணமான இன்னொரு வசனம்தான் கிளைமேக்ஸ்ல வர்ற “என்னோட மனசு, புத்தி இரண்டுமே ஒண்ணுதான்” அப்படிங்கிற வசனம்.

எல்லாம் சரி… ஆனா, அவரை ஏன் நான் இங்க எழுத்து இன்ஜினியர்னு குறிப்பிடறேன்?

காரணம் இருக்குங்க….அவரு பிரமாண்ட சினிமாக்களுக்கு பின்னாடி இருந்த எழுத்தாளர் மட்டும் இல்லங்க. இன்னைக்கு இந்திய அரசாங்கங்களைத் தீர்மானிக்கிற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பின்னாடி இருந்த இன்ஜினியரும்கூட!

என்ஜினியரிங் தெரிந்த எழுத்தாளர். அதனால்தான் அவர் நாவல்களிலும் வசனங்களிலும் அறிவியலும் தொழில்நுட்பமும் சற்று அதிகமாகவே விளையாடியிருக்கும்.

sujatah

திரைக்கதையை தாங்கள் படிக்க வேண்டிய முதன்மை பாடமாகக் கொண்டீர்களானால், இங்கு நான் எழுதிக்கொண்டிருக்கும் புத்தம்புது காப்பி ஒரு சேம்பிள் பிராஜக்ட்ஸ் (Sample Projects) தொகுப்பு. ஒரிஜினல் சிலபஸ் (Original syllabus) பாடத் திட்டம் சுஜாதா அவர்கள் எழுதிய ’திரைக்கதை எழுதுவது எப்படி?’ என்கிற புத்தகம்தான். நேரம் கிடைத்தால் அதையும் வாங்கி வாசியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

அதை வாசிக்கும் போது உங்களுக்கே தெரியும், தமிழ் சினிமாவில் நல்ல திரைக்கதைகளைக் கட்டமைக்க ஒரு தெளிவான ப்ளூ பிரிண்ட் போட்டுக் கொடுத்த எழுத்து என்ஜினியர்தான் சுஜாதா அவர்கள் என்று!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.