வாரத்தில் 7 நாட்களில் வெகுஜன ஊடக அமைச்சு ஊடாக ஊடக கலந்துரையாடலை நடத்தி பொது மக்களுக்கு தகவல்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (26) காலை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.இந்த ஊடக சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் வைத்தியர் ரமேஷ் பத்திரண, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெகுஜன ஊடக அமைச்சர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் இன்று சமூக வலைப்பின்னல் ஊடாக பல்வேறு விடயங்களில் தொடர்பாடல் மிகவும் பரந்த மட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறு மேற்கொள்ளப்படும் தொடர்பாடல்களில் உள்ள தகவல்களின் உண்மையான, உண்மைக்கு புறம்பான தகவல்களும் உள்ளன.
சிலவேளைகளில் சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் தகவலை மற்றுமொருவர் உண்மைக்கு புறம்பானது என குறிப்பிடும் சில சந்தர்ப்பங்களையும் எம்மால் காணக்கூடியதாக உள்ளது.
இறுதியில் சரியான விடயம் என்ன என்பதை பொது மக்களால் கண்டுகொள்வதற்கு நடைமுறை இல்லை.
இதன் காரணமாக நான் வெகுஜன ஊடக அமைச்சர் என்ற ரீதியில் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட பின்னர் பல்வேறு குழுக்களுடன் எமது தகவல்களை வழங்கும் செயற்பாடுகளை விரிவு படுத்துவதற்கான கலந்துரையாடலை நடத்தியுள்ளேன்.
இதற்கமைவாகவே வாரத்தில் 7 நாட்களுக்கும் எமது அமைச்சின் ஊடாக ஊடக சந்திப்புக்களை நடத்தி அதன் போது முக்கிய விடயங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு தேவையான தகவல்களை வழங்க முடியும்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் பொதுமக்களுக்கு தேவையான தகவல்களை ஊடகவியலாளர்களால் கேள்விகளை கேட்டு இவற்றை சரி செய்ய முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
தவறான தகவல்களை வழங்குவது தொடர்பில் நாம் மற்றுமொரு வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். இதற்காக தனியே வாரத்தில் ஒரு நாளில் அல்லது இரண்டு நாளில் அரசாங்கத்தின் சட்ட ரீதியிலான கட்டமைப்பு ஊடாக பரிமாறப்படும் தகவல்களில் தவறு இருக்குமாயின் அது தொடர்பில் விளக்கமளிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது என்று குறிப்பிட்ட அமைச்சர் இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட வாரத்தில் வெளியான தவறான தகவல்கள் தொடர்பில் உண்மையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடிகின்றது என்றும் அமைச்சர் கூறினார்.