புதுச்சேரி : ‘அரசு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என, அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:முதல்வர் ரங்கசாமி, கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கி ஆரம்பகல்வி முதல், ஆராய்ச்சி கல்வி வரை செலவிட்டு வருகிறார். பட்டம் பெற்றவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத் தில் அரசின் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதுச்சேரி மாநிலத்தை இந்தியாவில் முதலிடத்துக்கு கொண்டு வர வேண்டும் என செயல்படுகிறோம். பிரதமர் கூறியபடி ‘பெஸ்ட் புதுச்சேரி’யை உருவாக்கி வருகிறோம்.புதுச்சேரிக்கு மத்திய அரசு உறுதுணையாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் புதுவை மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட அரசாக திகழ்கின்றன. மத்திய, மாநில அரசுகளுக்கு உறவுப்பாலமாக கவர்னர் தமிழிசை திகழ்கிறார்.படிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் அரசு வேலை வழங்க முடியாது. இளைஞர்கள் நலனுக்காக ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ என்ற திட்டத்தை பிரதமர் கொண்டு வந்துள்ளார். தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அமைச்சர் பேசினார்.
Advertisement