ராஞ்சி: மின்வெட்டு பிரச்னை குறித்து தோனியின் மனைவி சாக்ஷி சிங் போட்ட டுவிட்டர் பதிவால் ஜார்க்கண்டில் பலரும் சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி சிங் ராவத், ஜார்கண்ட் மாநிலத்தில் நிலவும் மின் பிரச்னை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், ‘ஜார்க்கண்ட் அரசுக்கு வரி செலுத்துகிறோம். ஆனால், ஜார்கண்டில் எதற்காக மின்வெட்டு ஏற்படுகிறது என்பதை அறிய விரும்புகிறேன். இத்தனை ஆண்டுகளாக ெதாடரும் மின்சார தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண விரும்புகிறேன். மின்சாரத்தை சேமிப்பதற்கான திட்டத்தை தெரிவித்தால், நாங்கள் எங்களது பங்களிப்பை செய்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பு கருத்துகளையும் சமூக ஊடக வாசிகள் தெரிவித்து வருகின்றனர். அதில் லட்சுமண் என்பவர், ‘பவர் கட் மூலம் உங்களுக்கு இத்தனை பிரச்னையா? குடியிருக்க வீடு கிடைக்காதா (?) இவரது வாழ்க்கையில் எவ்வளவு இருள் சூழ்ந்துள்ளது என்பதை யோசித்துப் பாருங்கள்?’ என்றும், ஆதித்யா என்பவர், ‘பீகாரில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் பிரிக்கப்பட்டபோது, மின்உற்பத்தியில் புதிய உச்சத்தைத் தொட முடியும் என்று கூறினர். ஆனால், இன்று ஜார்க்கண்டை விட பல வழிகளில் பீகார் முன்னோக்கி சென்றுள்ளது. தொழில்துறை மற்றும் சுரங்கங்கள் இருந்தபோதிலும், இங்கு நிலைமை பரிதாபமாக உள்ளது’ என்று கூறியுள்ளார். அதேநேரத்தில், குமார் ஹர்ஷ் என்ற டுவிட்டர் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார். அதில், ‘எங்கள் அன்பான முதல்வர் ஹேமந்த் சோரன் அவர்களே! மின்தடை பிரச்னை தொடர்பாக ஜார்கண்ட் மக்களுக்கு தயவுசெய்து பதில் சொல்லுங்கள். தலைநகர் ராஞ்சியிலும் 15 மணி நேரத்திற்கும் குறைவாகவே மின்சாரம் கிடைப்பது ஏன்?’ என்று கூறியுள்ளார். இவ்வாறாக பலரும் மின்வெட்டு குறித்து விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.