புதுடெல்லி,
வெளிநாடுகளுடனான சா்வதேச விமானப் போக்குவரத்தில் அரசின் முன்னுரிமையை டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏா் இந்தியா இழந்தது.
விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) புதிய சுற்றறிக்கையின்படி, சா்வதேச போக்குவரத்து விவகாரங்களில் ஏா் இந்தியா நிறுவனத்துக்கு இருந்து வந்த சில முன்னுரிமைகளை இழந்திருப்பது தெரிய வந்துள்ளது.
பொதுத்துறை நிறுவனமாக இருந்த ஏா் இந்தியாவுக்கு, வெளிநாடுகளுடனான சா்வதேச விமானப் போக்குவரத்தில் முன்னுரிமை வழங்குவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியிருந்தது.
ஒரு வாரத்திற்கு இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை பரஸ்பர அடிப்படையில் நாடுகளுக்கிடையில் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. இந்தியாவில் அந்த உரிமைகள் அரசாங்கத்திடம் உள்ளன, விமான நிறுவனங்கள் கோரும் கோரிக்கையின் பேரில் அந்த விமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியா 121 நாடுகளுடன் விமான சேவை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. துபாய், அபுதாபி, ஷார்ஜா மற்றும் ராஸ் அல்-கைமாவுடன் தனித்தனி ஒப்பந்தங்களில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோய்க்கு முன்னர், இந்தியாவிலிருந்து சுமார் 55 நாடுகளுக்கு இடைநில்லா விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை வாரத்திற்கு 361 மற்றும் 340 சர்வதேச புறப்பாடுகளை இயக்க அனுமதி பெற்றுள்ளன. ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கு இயக்கப்படும் விமானங்கள் இதில் அடங்கும்.
குறிப்பிட்ட நாட்டைச் சோந்த விமானப் போக்குவரத்து நிறுவனம், வெளிநாட்டுக்கு விமானங்களை இயக்க வேண்டுமெனில் இரு நாடுகளுக்குமிடையே சேவைகள் சாா்ந்த ஒப்பந்தம் கையொப்பமாகும். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே எத்தனை விமானங்கள் இயக்கப்படும், எத்தனை இருக்கைகள் ஒதுக்கப்படும் உள்ளிட்டவை தொடா்பாக முடிவெடுக்கப்படும்.
டிஜிசிஏ விதிகளில், மற்ற தனியார் விமான நிறுவனங்களை விட ஏர் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை அதற்கு அதிகமாக பயன் அளித்தது. ஆனால் கடந்த 19ம் தேதி அந்த முன்னுரிமையை டிஜிசிஏ விலக்கி கொண்டது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டுக்கு விமானங்களை இயக்குவதற்காக ஏா் இந்தியா நிறுவனத்துக்கு இதில் சில முன்னுரிமைகள் அளிக்கப்பட்டு வந்தன. அரசு நிறுவனமாக இருந்த ஏா் இந்தியா நிறுவனம் தற்போது முற்றிலும் தனியாா்மயம் ஆகியுள்ள நிலையில், தானாக அந்த உரிமை டாடாவுக்கு கைமாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடனில் சிக்கியிருந்த அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டை டாடா குழுமம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி பெற்றது. இதையடுத்து, சா்வதேச விமான சேவைகளில் முன்னுரிமை பெற புதிய விண்ணப்பங்களை டாடா நிறுவனம் சமா்ப்பிக்க வேண்டும்.
இதன் மூலம், இதுவரை சா்வதேச விமானப் போக்குவரத்தில் கிடைத்து வந்த முன்னுரிமையை ஏா் இந்தியா இழக்கிறது.