காங்கிரஸில் சேர பிரஷாந்த் கிஷோர் மறுப்பு: பின்னணி என்ன?

காங்கிரஸ்
தொடர் தோல்விகளால் தத்தளித்து வரும் நிலையில், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்கான முயற்சிகளில் இப்போதே அக்கட்சி இறங்கி விட்டது. அக்கட்சியின் தலைவர் சோனியா தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், கலந்து கொண்ட தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர், தனது விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் சேரும் தனது விருப்பத்தையும்
பிரஷாந்த் கிஷோர்
தெரிவித்ததாகவும், அவரை கட்சியில் சேருமாறு சோனியா காந்தியே அழைப்பு விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும், பிரஷாந்த் கிஷோர் முன்வைத்த திட்டத்தை காங்கிரஸ் தலைவர்
சோனியா காந்தி
அமைக்கும் குழு கவனித்து இறுதி முடிவை ஒரு வாரத்தில் கட்சி தலைவரிடம் அறிக்கை சமர்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து, அவர் கட்சியில் சேர்வது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகின.

கட்சியில் இணைவது என்பது உள்ளிட்ட பிரஷாந்த் கிஷோரின் ஆலோசனைகள் குறித்து இன்னும் ஒரு வாரத்தில் முடிவு தெரியவரும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியில் பிரபல தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர் அதிகாரப்பூர்வமாக இன்னும் ஒரு வாரத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் கசிந்தன. எந்த எதிர்பார்ப்புமின்றி – எதையும் விரும்பாமல், கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த உதவும் தனது திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மட்டுமே கட்சி மேலிடத்திடம் பி.கே. விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் சேர தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்து விட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். “பிரசாந்த் கிஷோர் உடனான ஆலோசனை மற்றும் அவர் அளித்த செயல்திட்டத்தையடுத்து, 2024 ஆம் ஆண்டுக்கான அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழுவை சோனியா காந்தி அமைத்தார். வரையறுக்கப்பட்ட பொறுப்புடன் கூடிய அக்குழுவின் ஒரு பகுதியாக அவரை கட்சியில் சேர சோனியா அழைப்பு விடுத்தார். ஆனால், பிரஷாந்த் கிஷோர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். கட்சியில் சேராவிட்டாலும் அவர் வழங்கிய ஆலோசனைகளுக்கு நன்றி.” என்று ரந்தீப் சுர்ஜேவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் பிரஷாந்த் கிஷோர் இணையவுள்ளதாக கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் கூட, அவர் காங்கிரஸில் சேர்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி தீவிரமாக பேசப்பட்டது. ஆனால், அவை வெறும் ஊகங்களாக மாறிப்போயின. மாறாக, காங்கிரஸ் கட்சியையும் அது செயல்படும் விதத்தையும் வெளிப்படையாகவே பகிரங்கமாக விமர்சித்து வந்தார்.

ஆனால், சோனியா உடனான பி.கே.வின் தற்போதைய அடுத்தடுத்த சந்திப்புகளால் அவர் கட்சியில் உறுதியாக இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸில் சேர அவர் மறுப்பு தெரிவித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.கே.வை கட்சியில் சேர்க்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியான நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த முறையும் இதேபோன்று கட்சியின் சீனியர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலேயே அவர் கட்சியில் சேரவில்லை என்று கிசுகிசுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.