டெல்லி: பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய மறுத்துவிட்டதாக, காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா டிவிட் பதிவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் வகையில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுடன் தொடர் ஆலோசனை நடத்தினார். 3 முறை நடைபெற்ற இந்த ஆலோசனையின் போது, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட மூத்த தலைவர்கள் சிலரும் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து பிரசாந்த் கிஷோர் கட்சியின் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பாக அறிக்கையை சமர்ப்பித்ததாகவும், தனக்கு முக்கிய பதவி வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாகவும் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான செயல்குழு ஒன்றை,உருவாக்கி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் 3நாள் மாநாடு, ராஜஸ்தானில் நடைபெறும் என்றும் அதற்காக 4 குழு அமைத்து, அதற்கு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை நியமித்து கட்சி தலைவர் சோனியாகாந்தி அறிவித்தார்.
இதற்கிடையில் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பதற்கு எதிர்ப்புகளும் எழுந்ததாக கூறப்படுகிறது. சில மூத்த தலைவர்கள் மாணிக்கம் தாகூர் உள்பட பலர் பிரசாந்த் கிஷோர் வருகை எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் பரவின.
இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேர மறுத்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, பிரசாந்த் கிஷோருடனான விளக்கக்காட்சி மற்றும் கலந்துரை யாடலைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் 2024 ஆம் ஆண்டு அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழுவை உருவாக்கி, வரையறுக்கப்பட்ட பொறுப்புடன் குழுவின் ஒரு பகுதியாக அவரை கட்சியில் சேர அழைக்கப்பட்டது. அவர் மறுத்துவிட்டார். அவரது முயற்சிகள் மற்றும் கட்சிக்கு வழங்கப்பட்ட ஆலோசனையை நாங்கள் பாராட்டுகிறோம்.