இஸ்லமாபாத்: பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் சீனாவைச் சேர்ந்த மூவர் உட்பட நான்கு பேர் பலியாகினர்.
இதுகுறித்து டான் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், “கராச்சி பல்கலைகழகத்தில் சீன மொழியை பயிற்றுவிக்கும் கட்டிடத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் இருந்த குண்டு வெடித்தத்தில் 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். பலியானவர்கள் மூன்று பேர் சீனாவை சேர்ந்தவர்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
சீனர்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பலூசிஸ்தான் பிரிவினைவாதிகள் கடந்த சில மாதங்களில் பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் சீனர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று பாகிஸ்தான் போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், முதற்கட்டமாக வேனின் அருகே வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் பாகிஸ்தான் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவினரும் விரைந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழிந்தவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.