பாகூர்,:புதுச்சேரி – கடலுார் சாலையில் ரெட்டிச்சாவடி மலட்டாற்றின் குறுக்கே புதியதாக மேம்பாலம் அமைக்கும் பணியை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.புதுச்சேரி – கடலூர் சாலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால், சாலை தரம் உயர்த்தப்படாமலும், பாதுகாப்பு அம்சங்கள் சரியாக செய்யப்படாமலும் உள்ளதால் விபத்துக்கள் அதிகளவில் நடந்து வருகிறது. குறிப்பாக, தமிழக பகுதியான ரெட்டிச்சாவடி மலட்டாறு மேம்பாலம் குறுகலாகவும், சாலை சேதமடைந்த நிலையிலும் இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதுடன், உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.இதன் காரணமாக, இந்த பாலத்தை அகலப்படுத்தி தரம் உயர்த்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக, புதுச்சேரி பொதுப்பணித்துறையின் தேசிய நெடுஞ்சாலைகள் கோட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, ரெட்டிச்சாவடி மலட்டாற்றில் 6 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக மேம்பாலம் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பினர். இதற்கு, மத்திய சாலை மற்றும் தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ரெட்டிச்சாவடி மலட்டாற்றின் குறுக்கே நான்குவழிச் சாலை வசதியுடன் புதிய பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து மேம்பாலம் பாலம் அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். சபாநாயகர் செல்வம், பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ,, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, தேசிய நெடுஞ்சாலைகள் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், உதவி பொறியாளர் ராமமூர்த்தி, இளநிலை பொறியாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Advertisement