2022-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் உற்சாகத்துடன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் பலரும் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி வரும் நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
யார்க்கர் பந்து வீச்சில் கைதேர்ந்த நடராஜன் தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் சார்பாக விளையாடி வருகிறார். அவரின் சிறப்பான ஆட்டத்தைக் கண்ட சுனில் கவாஸ்கர் அவரைப் புகழ்ந்து டி20 உலகக்கோப்பை அணியில் நடராஜன் இடம் பிடிப்பார் என்றும் அவரது சிறப்பான பந்து வீச்சை இந்திய அணி பயன்படுத்திக்கொள்ள வேண்டும், தவறவிட்டுவிடக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
இது பற்றிப் பேசிய அவர், “அவரது யார்க்கர்கள் அவரது சிறப்பு என்பதை நாம் அனைவரும் அறிவோம். நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் பந்து வீசும் விதம் முதிர்ச்சி அடைந்துள்ளது. அவரது திறமைகளைத் தவறவிட்டுவிடக் கூடாது, இந்திய அணி அவரை திரும்பி பார்க்க வேண்டும். டி20 உலகக்கோப்பை போட்டியில் 16வது ஓவருக்கும் 20வது ஓவருக்கும் இடையில் அவர் சிறப்பாக பந்து வீசுவார் என்று உறுதியாக நம்புகிறேன். கடந்த ஆண்டு அவரை இந்திய அணி இழந்திருந்தது. ஆனால் தற்போது அவர் முழு நம்பிக்கையுடன் விளையாடாத் தயாராக இருக்கிறார். உலகக் கோப்பை வரப்போகிறது என்பதை உணர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். நடராஜன் கண்டிப்பாக இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பார். ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பைக்கான அணியில் அவரின் பெயர் இருக்கும்” என்றார்.