மதுரை; மதுரையில் புதிதாக சாலைகள் போடுவதற்காக நெடுஞ்சாலை துறை சாலைகளில் மில்லிங் போடப்பட்டுள்ளது. இதனால் பைக்குகளில் செல்வோர் தடுமாறி கீழே சறுக்கி வழுக்கி தடுமாறி விழுந்து படுகாயம் அடைந்து செல்லும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கடந்த காலங்களில் சாலைகள் தரமாக போபாடததால் புதிதாக போடப்பட்ட சாலைகள் கூட ஒரு சில மாதங்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் கற்கள் பெயர்ந்து மோசமடைந்துள்ளது. மதுரை பை-பாஸ் ரோடு, அரசரடி ரோடு, திருநகர் ரோடு உள்ளிட்ட நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலைகள் நீண்ட காலமாக சேதமடைந்து காணப்பட்டது. இந்த சாலைகளை புதிதாக போடுவதற்கு நெடுஞ்சாலைத்துறையில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக கடந்த 2 வாரத்திற்கு முன் இந்த மூன்று சாலைகளுக்கு மில்லிங் போடப்பட்டது.
அதனால், இந்த சாலைகளில் வழிநெடுக கோடு கோடாக பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களின் டயர்கள் இந்த பள்ளங்களில் உருளும்போடு தடுமாறி வாகன ஓட்டிகள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து விபத்துக்குள்ளாகின்றனர். டயர்களும் பஞ்சராகி விடுகிறது.
அதனால், உடனடியாக இந்த சாலைகளை சீரமைத்து புதிதாக போட வேண்டும் என்றும், இனி வரும் காலங்களில் புதிதாக சாலைகள் போடுவதற்கு முந்தைய நாள் சாலையை தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘புதிய சாலைகள் போடும்போது தற்போது அப்படியே ஏற்கனவே இருந்த சாலை மீது தார், ஜல்லிப்போட்டு புதிதாக போடக்கூடாது. சாலைகள ஆழமாக தோண்டி ஜல்லி, தார்போட்டு தரமாக போட வேண்டும். அதற்காக அந்த சாலைகள் தோண்டப்பட்டது. ஆனால், சாலைகளை முழுமையாக தோண்டுவதற்கான இயந்திரங்கள் கிடைக்கவில்லை. மேலும், கோடை மழையும் ஒரு வாரம் விடாமல் செய்தது. அதனால், புதிய சாலைகள் போடுவதில் தேக்கம் ஏற்பட்டது. தற்போது உடனடியாக அந்த சாலைகளை புதிதாக போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ’’ என்றனர்.