ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்வெட்டு நிலவுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ள தோனியின் மனைவி சாக்க்ஷி, மக்களின் கேள்விகளுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகம் உட்பட நாடெங்கும் பல மாநிலங்களில் கடந்த சில தினங்களாக மின்வெட்டு நிலவி வருகிறது. மின்னுற்பத்தி நிலையங்களில் நிலவவும் நிலக்கரி தட்டுப்பாடே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதேநிலை நீடித்தால், ஆந்திரா, உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், ஜார்க்கண்ட், ஹரியானா உள்ளிட்ட 12 மாநிலங்களில் மின்வெட்டு தீவிரமடையும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்க்ஷி, தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என்ற கடமையை மக்கள் செய்து வருவதாக தெரிவித்துள்ள அவர், இருந்தபோதிலும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல ஆண்டுகளாக ஏன் மின்வெட்டு நிலவுகிறது? என கேள்வி எழுப்பியுள்ளார். பல ஆண்டுகளாக அரசுக்கு வரி செலுத்துபவர் என்ற முறையில் இந்த கேள்வியை அரசிடம் கேட்பதாக அவர் பதிவிட்டுள்ளார். மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலையில் உள்ள ஒன்றிய- மாநில அரசுகள் இதற்கு என்ன பதில் கூறப்போகின்றன என்று சாக்க்ஷி தோனி கேள்வி எழுப்பியுள்ளார்.