உக்ரைனுக்கு திரும்பும் பிரித்தானிய தூதர்கள் குறிவைக்கப்படுவார்கள் என பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது ரஷ்யா.
ரஷ்யா மீது வெடிகுண்டு வீசுவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் ஆத்திரமூட்டும் கருத்தை வெளியிட்ட நிலையிலேயே இந்த மிரட்டல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய கட்டமைப்புகள் மீது உக்ரேன் வான் தாக்குதலை முன்னெடுக்க வேண்டும் எனவும் அதற்கு பிரித்தானியா ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் பாதுகாப்பு அமைச்சர் James Heappey தெரிவித்திருந்தார்.
மட்டுமின்றி, ரஷ்யா மீது தாக்குதலை முன்னெடுக்க பிரித்தானியாவின் ஆயுதங்களை பயன்படுத்துவது என்பது முற்றிலும் சட்டபூர்வமானது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், குறித்த கருத்தை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ள ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், இது ஆத்திரமூட்டும் செயல் எனவும் விமர்சித்துள்ளது.
மேலும், பிரித்தானியா மற்றும் மேற்கத்திய நாடுகளின் தூதர்கள் குழு கலந்து கொள்ளும் கூட்டங்கள் உட்பட உக்ரேனின் முடிவெடுக்கும் மையங்களை இலக்கு வைத்துள்ளதாகவும், தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் முன்னெடுக்கப்படும் என ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது.
உக்ரேன் தலைநகரில் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, பிரித்தானிய தூதரகத்தை திறப்பது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் முதல் நாடாக பிரித்தானியா தமது தூதரகத்தை உக்ரேனில் செயற்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது.
மேலும், அடுத்த சில வாரங்களில் அமெரிக்க தூதர்களும் உக்ரேனுக்கு திரும்புவார்கள் என அமெரிக்க தரப்பும் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர்கள் 40 பேர் நேற்று ஜேர்மனியில் சந்தித்து உக்ரைனுக்கு கனரக ஆயுத அமைப்புகளை அனுப்ப ஒப்புக்கொண்டனர்.
ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வந்த ஜேர்மனி, இறுதியில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் 50 எண்ணிக்கையில் உக்ரேனுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.