பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்கும் நோக்கோடு நிதியமைச்சு புதிய சுற்றுநிரூபமொன்றை வெளியிட்டுள்ளது.
அரச சேவைச் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக நிதி அமைச்சின் செயலாளர் அனைத்து அமைச்சுக்கள், அரச அமைச்சுக்கள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு இதுதொடர்பாக விசேட சுற்றறிக்கை ஒன்றை நேற்று (26) விடுத்துள்ளார்.
அரச நிதியை பொறுப்பாகவும், முகாமைத்துவத்துடனும் பயன்படுத்த வேண்டுமென்று இந்த சுற்றுநிரூபத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களின் போது செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திட்டச் செலவுகளைக் கட்டுப்படுத்துதல், எரிபொருள் மற்றும் தகவல் தொடர்புச் செலவுகளைக் குறைத்தல், நலன்புரி மற்றும் நிவாரணச் செலவினங்கள் போன்ற 17 விடங்களை கொண்ட வழிகாட்டுதல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
அரச செலவினத்தை அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்தி கடுமையான நிதி கட்டுப்பாட்டை மேற்கொள்ளவும் இதன் மூலம் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அரச நிறுவகங்களுக்கு இடையிலான தொலைத்தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கு உயர்ந்த பட்ச அளவில் இலத்திரனியல் முறைமைகளைப் பயன்படுத்துவதன் மூலம் காதிதாதிகளுக்கான செலவினத்தை குறைக்க முடியும் என்று நிதியமைச்சின் புதிய சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.