சென்னை: தஞ்சை தேர் விபத்து தொடர்பாக பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மேலும் பேச அனுமதி கேட்ட நிலையில், அதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்ததால், பேச அனுமதிக்க வலியுறுத்தி அதிமுகவினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமம் அப்பர் கோயில் சித்திரைத் திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தின்போது மின் கம்பத்தில் எதிர்பாராத விதமாக தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார். இந்த விபத்து தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தஞ்சை தேர் விபத்து குறித்து அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால், அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அவையில் இருந்து வெளியேறற சபாநாயகர் உத்தரவிட்டார். அவைக்கு குந்தகம் விளைவிப்பதாக கூறி வெளியேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, திருவிழா காலங்களில் போதிய பாதுகாப்பு இல்லை எனக்கூறி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல் ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசு திருவிழாக்களில் போதிய பாதுகாப்பு வழங்குவதில்லை என்று குற்றம் சாட்டியதுடன், மதுரையில் கள்ளழகர் வைகையில் இறங்கியபோதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியதுடன், தஞ்சை மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தேர் விபத்து ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தேர் தீ விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.