புனே சோம்நாத் நகரில் உள்ள டெய்லர் கடையில் வேலை செய்து வந்தவர் மிலிந்த் (35). இவரை அந்தக் கடையின் பெண் உரிமையாளர் பாலா ஜனிங்(32) ஏதோ பிரச்னை காரணமாக, ஒரு வாரத்துக்கு வேலையிலிருந்து பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மிலிந்த் கடை உரிமையாளர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வந்திருக்கிறார். இந்த நிலையில், அவரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மிலிந்த் இரவு 11 மணிக்கு டெய்லர் கடைக்குச் சென்றிருக்கிறார். கடையில் பாலா மட்டும் இருந்திருக்கிறார். அதைக் கண்ட மிலிந்த், அவர் மீது தான் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். பெட்ரோல் கடையில் இருந்த துணிகள் மீதும் பரவியதால், தீ மிலிந்த் மீதும் பற்றிக்கொண்டது. இருவரும் தீயில் சிக்கி கத்திக்கூச்சல் போட்டனர்.
உடனே பக்கத்தில் மொபைல் ஷாப் வைத்திருக்கும் ஒருவர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றார். ஆனால் அவராலும் முடியவில்லை. அதோடு அந்தக் கடைக்காரருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. அதையடுத்து, தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் மிலிந்த் அன்றைய தினமே சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். பாலா சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை அவரும் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார்.
இருவரையும் காப்பாற்றப்போன நபர் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் சுனில் ஜாதவ் இது குறித்து கூறுகையில், “வேலையிலிருந்து நீக்கியதால் ஆத்திரத்தில் மிலிந்த், பாலா மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்திருக்கிறார். உடனே பாலா மிலிந்தையும் கட்டிப்பிடித்துக்கொண்டார். இதில் இரண்டு பேரும் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனலிக்காமல் இறந்து விட்டனர்.”