நாட்டில் தற்போதைய கொரோனா சூழ்நிலை குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநில முதல்வர்களும் கலந்துக் கொண்டனர். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தொற்று, பெட்ரோல்- டீசல் விலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக, பெட்ரோல்- டீசல் விலை உயர்வு குறித்து பேசிய பிரதமர் மோடி, மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மாநிலங்கள் பெட்ரோல் – டீசல் விலை மற்றும் வாட் வரியை குறைக்க வேண்டும் என்றும், வாட் வரியை குறைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்கவில்லை என்றும் மத்திய அரசுக்கு செவி கொடுக்காத மாநில மக்கள் தொடர்ந்து சுமைக்கு ஆளாகின்றனர் என்றும் பிரதமர் கூறினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:-
கர்நாடக மாநிலம் வரிகளை குறைக்காமல் இருந்திருந்தால், கடந்த ஆறு மாதங்களில் கூடுதலாக ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைத்திருக்கும். குஜராத்தும் ரூ.3500- 4000 கோடி அதிகமாக வசூலித்திருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. போலாந்து, பல்கேரியாவுக்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்திய ரஷியா