தமிழகத்தில் கோலாகலமாக தொடங்கிய சித்திரை சதய விழாவில் தேரின் உச்சிப்பகுதி மேலே சென்ற மின்கம்பி மீது உரசியதில் தேர் தீ பிடித்து எரிந்ததினால் 11 பேர் இறந்தனர்.
17-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.
தமிழகத்தில் தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் அப்பர்சாமி மடம் அமைந்துள்ளது. அப்பர் முக்தி பெற்ற தினமான சித்திரை சதய நட்சத்திரத்தில் அப்பர் குருபூஜை ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்கள் நடைபெறுவது வழமை.
அதன்படி இந்த ஆண்டு 94 ஆம் ஆண்டுக்கான சித்திரை சதயவிழா நேற்று தொடங்கியது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் மிக எளிமையான முறையில் திருவிழா நடைபெற்றது.
இம்முறை கொரோனா பரவல் குறைந்ததால் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. நேற்று மங்கள இசையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நள்ளிரவில் தொடங்கியது. பொதுவாக தேரோட்டம் காலை அல்லது மாலையில் நடைபெறும். ஆனால் இங்கு நள்ளிரவில் தொடங்கி அதிகாலை வரை நடப்பது வழக்கம்.
அதன்படி நள்ளிரவு 12 மணிக்கு தேர் திருவிழா தொடங்கியது. பல்வேறு வீதிகள் வழியாக சென்று நிலைக்கு வரும்போது தான் துயர சம்பவம் நடந்துள்ளது. தேரின் உச்சிப்பகுதி மேலே சென்ற மின்கம்பி மீது உரசியதில் தேர் தீ பிடித்து எரிய தொடங்கியது. அடுத்த நொடியே மின்சாரம் பாய்ந்து 11 பேர் இறந்தனர். 17-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.
இந்த துக்க சம்பவம் பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. கோலாகலமாக தொடங்கிய திருவிழா சோகத்தில் முடிந்தது