புதுடெல்லி:
பிரதமர் மோடி அடுத்த மாதம் ஐரோப்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறும்போது, “பிரதமர் மோடி வருகிற மே 2 முதல் 4-ந்தேதி வரை ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். 2022-ம் ஆண்டில் பிரதமரின் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும் என்று தெரிவித்துள்ளது.
ஜெர்மனி பயணத்தில் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஒலாப் ஸ்கொல்சுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இரு தலைவர்களும் வணிக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.
ஜெர்மனியில் உள்ள இந்திய சமூகத்தினருடன் மோடி கலந்துரையாடுகிறார்.
டென்மார்க் பிரதமர் மேட்டே பிரெடெரிக்சன் அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு நடக்கும் 2-வது இந்தியா- நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இதில் ஐஸ்லாந்து, நார்வே, சுவீடன், பின்லாந்து ஆகிய நாட்டு பிரதமர்களுடன் கலந்துரையாடுகிறார்.
மேலும் டென்மார்க்கில் வசிக்கும் இந்தியர்களுடன் உரையாடுகிறார்.
மே 4-ந்தேதி பிற்பகலில் பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு செல்லும் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானை சந்தித்து பேசுகிறார்.